கோவை மாவட்டம் காரமடையைச் சேர்ந்த சுப்ரமணி என்பவர் நீலகிரி வனத்துறையில் பணிபுரிந்து வந்தார். இவர் கடந்த 2007ஆம் ஆண்டு விபத்தில் சிக்கி உயிரிழந்து விட்டார்.
இவரது மகன் சுதன்ராஜ் திருநங்கையாக மாறி, தனது நண்பர்களால் தீப்தி என்று அழைக்கப்படுகிறார். பி.காம் பட்டதாரியான தீப்தி, வாரிசு வேலை என்ற அடிப்படையில் தனது தந்தையின் வேலையைக் கேட்டு, தமிழ்நாடு வனத்துறைக்கு விண்ணப்பித்திருந்தார். சென்ற ஐந்து ஆண்டுகளாக அவர் தொடர்ந்து முயற்சித்து வந்த நிலையில், தமிழ்நாடு வனத்துறை பணியில் சேர்வதற்கு தற்போது இவருக்கு உத்தரவு கிடைத்துள்ளது.
தனது தந்தை சுப்ரமணி பணிபுரிந்த நீலகிரி வனக்கோட்டத்திலேயே இவருக்கும் பணியிடம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து உதகையில் உள்ள மாவட்ட வன அலுவலர் குருசாமி தப்பாலாவைச் சந்தித்து தனது பணி ஆணையைப் பெற்று பணியில் சேர்ந்தார், தீப்தி. அவருக்கு இளநிலை உதவியாளர் பணி வழங்கப்பட்டுள்ளது.
இதன்மூலம், தமிழ்நாடு வனத்துறையில் பணியில் சேர்ந்த முதல் திருநங்கை என்ற பெருமை தீப்திக்கு கிடைத்துள்ளது. பல்வேறு போராட்டங்களுக்குப் பிறகு காவல் துறை உள்ளிட்ட சில துறைகளில் திருநங்கைகள் பணியில் சேர்ந்து வரும் நிலையில், வனத்துறையிலும் திருநங்கை ஒருவர் முதல் முறையாகப் பணியில் சேர்ந்திருப்பது மூன்றாம் பாலினத்தவர்களை மகிழ்ச்சி அடையச் செய்துள்ளது.