கேரளாவின் ஆலப்புழா, கோட்டயம் பகுதிகளில் பறவைக் காய்ச்சலால் ஏராளமான வாத்துகள் இறந்து வரும் சூழலில், குட்டநாட்டில் பண்ணைகளில் வளர்க்கப்படும் 2,700 வாத்துகளையும், வீடுகளில் வளர்க்கப்பட்ட 300 வாத்துகளையும் கொன்று அழிக்கும் பணி நேற்று நடந்தது. மேலும் சுமார் 2 கிலோ மீட்டர் சுற்றளவில் உள்ள வாத்துகளை கண்டறிந்து கொல்லும் பணியும் தீவிரமாக நடந்து வருகிறது.
இந்நிலையில் கேரளா எல்லையில் உள்ள கூடலூர் - பந்தலூர் தாலுகாவிற்கு உட்பட்ட 8 சோதனைச் சாவடிகளில் கோழிகள் மற்றும் பறவைகள் மற்றும் தீவனங்கள் கொண்டு வரத் தடை செய்யப்பட்டுள்ளது. மேலும் கூடலூர் பகுதியில் சுமார் 400 வாத்துகள் மற்றும் 15 ஆயிரம் கோழிகள் வளர்க்கப்படும் பண்ணையில் கால்நடைத்துறை மண்டல இணை இயக்குனர் பகவத்சிங் மற்றும் 3 கால்நடைத்துறை மருத்துவர்கள் அடங்கிய குழு இன்று ஆய்வு மேற்கொண்டது.