உலகளவில் ஜூலை 29ஆம் தேதி புலிகள் தினம் கொண்டாடப்படுகிறது. உலகில் மற்ற நாடுகளை விட இந்தியாவில்தான் 80 விழுக்காடு புலிகள் உள்ளன. 50 விழுக்காடு புலிகள் சரணாலயம் உள்ளது. அழிந்து வரும் புலிகளின் எண்ணிக்கையை தெரிந்துகொள்ள நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை புலிகள் கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. அதன்படி, இந்திய நாட்டின் தேசிய விலங்காக உள்ள புலி 2000ஆம் ஆண்டில் ஆயிரத்து 700ஆக இருந்தது.
இந்தியாவின் தேசிய விலங்காக போற்றப்படும் புலியை பாதுகாக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கைகள் எடுத்து பல வன பகுதிகளை புலிகள் காப்பகமாக அறிவித்துள்ளது. தற்போதைய நிலவரப்படி, இந்தியாவில் புலிகளின் எண்ணிக்கை 2ஆயிரத்து 967 ஆக உள்ளது. புலிகளில் சைபீரியன் புலிகள், பெங்கால் புலிகள், தென் சீன புலிகள், ஜாவா புலிகள், சுமத்திரா புலிகள், மலாயன் புலிகள், இந்தோனேசிய புலிகள், பாலி புலிகள், காஸ்பியன் புலிகள் என 9 வகை புலிகள் உலகில் உள்ளன.
குறிப்பாக தமிழ்நாட்டில் புலிகளின் எண்ணிக்கையை பெருக்கவும், பாதுகாக்கவும் களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம், முதுமலை புலிகள் காப்பகம், ஆனைமலை புலிகள் காப்பகம், சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் என நான்கு புலிகள் காப்பகங்கள் உருவாக்கப்பட்டன. கடந்த 2006ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் புலிகளின் எண்ணிக்கை 76ஆக இருந்தது. தற்போது புலிகளின் எண்ணிக்கை 354ஆக உயர்ந்துள்ளது.