நீலகிரி மாவட்டத்தில் உள்ள முதுமலை புலிகள் காப்பகம் 688 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டது. தொடர் மழை காரணமாக ஏராளமான காட்டு யானைகள், இந்த புலிகள் காப்பக வனப்பகுதிக்கு வரத் தொடங்கியுள்ளன.
இந்நிலையில் தெங்குமரஹாடா வனப்பகுதியில் நான்கு வயது மதிக்கத்தக்க ஆண் காட்டு யானை ஒன்று உயிரிழந்து கிடப்பதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அத்தகவலின் அடிப்படையில் சென்று வனத்துறையினர் பார்த்தபோது, ஆந்த்ராக்ஸ் நோய்க்கான அறிகுறிகளுடன் அந்த யானை இறந்திருக்கலாம் என சந்தேகம் எழுந்தது.
இதனையடுத்து சம்பவ இடத்திற்குச் சென்ற கால்நடை மருத்துவர்கள், யானையின் உடல் அருகே பாதுகாப்பு உடையுடன் சென்று ஆய்வு செய்து, ஆந்த்ராக்ஸ் நோய் காரணமாகத் தான் யானை உயிரிழந்தது என்பதை உறுதி செய்தனர். பிறகு யானையின் உடல் மீது கிருமி நாசினி தெளிக்கப்பட்டுத் தீயிட்டு எரிக்கப்பட்டது.
முன்னதாக இதே போல் 10 வயது மதிக்கத்தக்க யானை ஒன்று இப்பகுதியில் ஆந்த்ராக்ஸ் நோய் தாக்கி உயிரிழந்தது. இந்நோய் விலங்குகளிடமிருந்து எளிதாக மனிதர்களுக்குப் பரவும் தன்மை கொண்டதால், நீலகிரி மாவட்டத்தை சுற்றி வாழும் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
இதையும் படிங்க:ஆந்த்ராக்ஸ் நோய்க்கு பலியான 10 வயது குட்டி யானை!