நீலகிரி மாவட்டம் உதகமண்டலத்தில் உள்ள முதுமலை புலிகள் காப்பகத்தில் 21 வளர்ப்பு யானைகள் வளர்க்கப்பட்டுவருகின்றன. இதில் 10-க்கும் மேற்பட்ட கும்கி யானைகள் உள்ளன. இந்நிலையில், ஜான் என்ற கும்கி யானைக்கு திடீரென நேற்று முன்தினம் மதம் பிடித்தது.
மதம் பிடித்த ஜான் யானையை கட்டுக்குள் கொண்டுவர பாகன்கள் பல முயற்சிகளை மேற்கொண்டனர். அப்போது, பாகன்களின் பேச்சை கேட்காத ஜான் யானை, பாகன்களை தாக்கத் தொடங்கியது. மரத்தில் கொம்பை வைத்து பலமுறை முட்டித் தள்ள முயற்சி மேற்கொண்டது.
பாகன்கள் கல்லை கொண்டு தாக்குதல் மூன்று மணி நேரத்திற்கு மேலாக கட்டுக்குள் கொண்டு வரும் முயற்சி தோல்வியடைந்தது. இதனால் ஆத்திரமடைந்த மூன்று பாகன்கள், கும்கி யானையை கற்களாலும் கட்டைகளாலும் சரமாரியாகத் தாக்கினர். அதில், ஜான் யானை வலி தாங்க முடியாமல் சோர்வடைந்து பிளிறி கொண்டு வனப்பகுதிக்குள் ஓட முயற்சி மேற்கொண்டது.
யானையை கட்டுப்படுத்தும் முயற்சியில் இச்சம்பவம் காண்பவரை அதிர்ச்சியடையச் செய்தது. மேலும், முகாம்களில் வளர்க்கப்படும் யானைகளுக்கு மதம் பிடித்ததால் 40 நாளைக்கு தனியாக கட்டிவைக்கப்பட்டு சிகிச்சை அளிப்பது வழக்கம், ஆனால் ஜான் யானைக்கு சிகிச்சை அளிப்பதை விட்டுவிட்டு, பாகன்கள் சரமாரியாக தாக்கிய சம்பவம் வனவிலங்கு ஆர்வலர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.