நீலகிரி மாவட்டம் உதகையில் திமுக துணை பொதுச்செயலாளரும், நீலகிரி எம்.பியுமான ஆ.ராசா இன்று (மார்ச் 29) செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், ’இரண்டு நாள்களுக்கு முன்பு பெரம்பலூரில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் முதலமைச்சர் பழனிசாமி குறித்து நான் பேசியது சமூக வலைதளங்களிலும், ஊடகங்களிலும் பரப்பபட்டு வருகிறது. அதற்கு விளக்கமளித்தேன்.
திமுக தலைவர் ஸ்டாலின் வணக்கத்திற்குரியவர். அவரது அரசியல் ஆளுமையையும், தமிழ்நாடு முதலமைச்சர் பழனிசாமியின் ஆளுமையையும் பிறந்த குழந்தைகளாக உருவகப்படுத்தி தேர்தல் பரப்புரையில் பேசினேன். அதில் சில வரிகளை மட்டும் எடுத்து, திட்டமிட்டு உள்நோக்கத்துடன் அரசியல் காரணங்களுக்காக தவறாக சித்தரிப்பதையும் விளக்கினேன்.
அது குறித்து விவாதம் தொடர்ந்ததால் நேற்று கூடலூரில் நடைபெற்ற பரப்புரையில் எடப்பாடி பழனிசாமி, அவரது அன்னையார் ஆகிய இருவரின் புகழுக்கும் களங்கம் விளைவிக்க நான் எண்ணியதில்லை; இரு தலைவர்கள் குறித்த அரசியல் ஆளுமை பற்றியே நான் பேசினேன் என்றும் நானும், ஒரு தாயின் எட்டாவது பிள்ளை என்ற உணர்வோடு மீண்டும் விளக்கம் அளித்தேன்.
முதலமைச்சர் எனது பேச்சால் காயப்பட்டு கலங்கினார் என்ற செய்தி நாளிதழ்களில் படித்து மிகுந்த வேதனை அடைந்தேன். இடப்பொறுத்தமற்று சித்தரிக்கப்பட்டு தவறாக புரிந்துக்கொள்ளப்பட்ட எனது பேச்சுக்காக என் அடிமனதின் ஆழத்திலிருந்து எனது வருத்தத்தை தெரிவித்துகொள்கிறேன். இன்னும் ஒருபடி மேலேபோய் முதலமைச்சர் பழனிசாமி அரசியலுக்காக அல்லாமல் உள்ளப்படியே காயப்பட்டதாக உணர்வாரேயானால், எனது மனம் திறந்த மன்னிப்பை தெரிவித்து கொள்வதில் எனக்கு சிறிதும் தயக்கமில்லை.