நீலகிரி:உதகை, அவலாஞ்சி, எமரால்டு, இத்தலாறு, நஞ்சநாடு உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து கன மழை பெய்து வருவதால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் பாலாடா ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஆற்றில் நீர் வரத்து அதிகரித்ததால் மழை நீர் கரை புரண்டு ஆற்றின் இரு புறமும் உள்ள காய்கறி தோட்டங்களுக்குள் புகுந்தது.
இதையடுத்து கப்பதொரை, எம்.பாலாட, கல்லக்கொரை ஆடா, பைகமந்து உள்ளிட்ட பகுதிகளில், ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலம் தண்ணீரில் மூழ்கி குளம் போல காட்சி அளிக்கின்றன.
இதனால் அறுவடைக்கு தயாராக இருந்த கேரட், பீட்ரூட், உருளை கிழங்கு தோட்டங்கள் நீரில் மூழ்கி உள்ளதால் முற்றிலுமாக சேதம் அடைந்துள்ளன. மேலும் அப்பகுதியை சார்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு சுமார் ஒரு கோடி வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
கடந்த 2019ஆம் ஆண்டு இதே போல் பாலாடா ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு கடும் சேதம் ஏற்பட்ட நிலையில், தற்போது மீண்டும் அதே போன்ற நிலை ஏற்பட்டுள்ளதால் காய்கறி விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
இதற்கு தமிழ்நாடு அரசு உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், பெருமழை காலங்களில் பாலாடா ஆற்று நீர் விவசாய நிலங்களுக்குள் புகுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் விவசாயிகள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: மகாராஷ்டிராவில் நிலச்சரிவு: சிக்கியிருக்கும் 400 பேர்