நீலகிரி: தமிழ்நாட்டில் கரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் ஏழை, எளிய மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
அவர்களுக்கு ஏற்பட்ட சிரமங்களைக் குறைக்கும் வகையிலும், கரோனா காலத்தில் வாழ்வாதாரத்துக்கு உதவும் வகையிலும் இந்த மாதத்திலிருந்து அனைத்து அரிசி ரேஷன் கார்டுதாரர்களுக்கும் கரோனா நிவாரண நிதியாக ரூ.4 ஆயிரம் வழங்கப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்தார்.
இம்மாதம் முதல் தவணையாக ரூ.2 ஆயிரம் வழங்கப்படும் எனவும், இதற்காக ரூ.4153.39 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இத்திட்டத்தை நீலகிரி மாவட்டத்தில் நேற்று (மே.15) முதல் கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் பொருட்டு வீடு வீடாகச் சென்று டோக்கன்கள் வழங்கப்பட்டன.
தற்போது, கரோனா நிவாரண நிதி ரூ.2 ஆயிரம் வழங்கும் நிகழ்ச்சி குன்னூர் அருகேயுள்ள எடப்பள்ளி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா முன்னிலை வகித்தார்.
மேலும், வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் பங்கேற்று குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.2 ஆயிரம் நிவாரணத் தொகையை வழங்கி தொடங்கி வைத்தார். இதேபோல் குன்னூர் ரயில்வே ஊழியர்கள் கூட்டுறவு பண்டக சாலையிலும் நிவாரண நிதி வழங்கும் திட்டத்தை அமைச்சர் தொடங்கி வைத்தார்.
இதையடுத்து, நீலகிரி மாவட்டத்தில் 402 ரேசன் கடைகள் உள்ளன. மொத்தம் 2 லட்சத்து 16 ஆயிரத்து 86 குடும்ப அட்டைகள் உள்ளன. ஒரு குடும்ப அட்டைக்கு ரூ.2 ஆயிரம் வீதம் அனைத்து குடும்ப அட்டைகளுக்கும் ரூ.43 கோடியே 21 லட்சத்து 72 ஆயிரம் வழங்கப்பட உள்ளதாக அமைச்சர் ராமச்சந்திரன் தெரிவித்தார்.
இதையுக் படிங்க:இன்று முதல் அமலுக்கு வருகிறது ஆவின் பால் விலை குறைப்பு