மேட்டுப்பாளையத்திலிருந்து ஊட்டி வரை 46.5 கிலோ மீட்டர் கொண்ட மலை ரயில் பாதையின் இரு புறங்களிலும் அழகிய இயற்கை காட்சிகள் காணப்படுகின்றன. மலை ரயில் பயணத்தின்போது வனப்பகுதியில் உலாவும் காட்டு விலங்குகளையும், இயற்கையின் அழகையும் ரசித்து முடியும் என்பதால் சுற்றுலா பயணிகள் மலை ரயில் பயணத்தை பெரிதும் விரும்புகின்றனர்.
மலைப்பாதை தண்டவாளத்தில் பல் சர்க்கரம் மூலம் ரயில் செல்லும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. ஆசியாவிலேயே உதகை மலை ரயில்தான் பல்சர்க்கர மூலம் இயக்கப்படுகிறது. கரோனா பாதிப்பு காரணமாக கடந்த மார்ச் மாதத்தில் இருந்து மலை ரயில் இயக்கம் நிறுத்தப்பட்டது. இந்த நிலையில் கடந்த வாரம் தனியார் மூலம் மலை ரயில் இயக்கப்பட்டது. சுற்றுலா பயணி ஒருவருக்கு கட்டணமாக மூன்றாயிரம் ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தனியார் மூலம் மலை ரயில் இயக்கப்பட்டதால் மலை ரயில் ஆர்வலர்களும், பொதுமக்களும் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.