கோவை:கடந்த 2021 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 8 ஆம் தேதி கோவை மாவட்டம் சூலூர் விமானப்படை தளத்தில் இருந்து, நீலகிரி மாவட்டம் வெலிங்டன் ராணுவ பயிற்சி மையத்திற்கு முப்படை தளபதி பிபின் ராவத் (Bipin Rawat) அவரது மனைவி உள்ளிட்ட 14 பேர் ஹெலிகாப்டரில் சென்றனர். நீலகிரி மாவட்டம், குன்னூர் அருகே உள்ள நஞ்சப்பசத்திரம் கிராமம் அருகே சென்றபோது மோசமான வானிலை மற்றும் மேகமூட்டம் காரணமாக, ஹெலிகாப்டர் மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது.
இதனைத்தொடர்ந்து, அங்கிருந்த கிராமமக்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டதோடு ஹெலிகாப்டர் விபத்து குறித்து காவல் துறையினருக்கும், தீயணைப்பு துறையினருக்கும் தகவல் அளித்தனர். இதன் பேரில், அங்கு விரைந்த காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினர் மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர். இருப்பினும், இந்த விபத்தில் முப்படை தளபதி பிபின் ராவத் மற்றும் அவரது மனைவி மதுலிக்கா ராவத் உள்ளிட்ட 14 பேர் உயிரிழந்தனர்.
இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து முப்படை தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட உயிரிழந்த ராணுவ வீரர்களின் உடல்களுக்கு வெலிங்டன் ராணுவ பயிற்சி மைய வளாகத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டது. பின்னர், உயிரிழந்தவர்களின் உடல்கள் அவர்களது சொந்த ஊர்களுக்கு கொண்டு செல்லப்பட்டன. இந்த விபத்தின்போது, நஞ்சப்பசத்திரம் கிராமமக்கள் தங்களது உயிரையும் பொருட்படுத்தாமல் ஹெலிகாப்டரில் இருந்தவர்களை காப்பாற்ற முயன்றனர்.
குழாய் மூலம் தண்ணீர் கொண்டு சென்று தீயை அணைக்கவும் முயன்றனர். மீட்புப் பணிகள் முடிந்த நிலையில் உயிரிழந்தவர்களின் உடல்களை கொண்டு செல்ல தங்களுடைய வீடுகளில் இருந்த போர்வைகளை ராணுவத்தினருக்கு தந்து உதவினர். இது ராணுவ அதிகாரிகளுக்கு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இதனைத்தொடர்ந்து, நஞ்சப்பசத்திரம் கிராமத்திற்கு வந்த ராணுவ உயர் அதிகாரிகள் கிராமமக்களின் சேவையை பாராட்டி அவர்களுக்கு ஒரு ஆண்டிற்கு 'இலவச மருத்துவ முகாம்' வழங்கப்படும் என அறிவித்தனர்.
மேலும், அவர்களிடம் குறைகளைக் கேட்டறிந்து அதற்கு தீர்வு காணுவதாக தெரிவித்தனர். அதன்படி அறிவித்த திட்டங்களை இரண்டு ஆண்டுகளில் செய்து முடித்ததாக கிராமமக்கள் கூறுகின்றனர். மேலும் இதுகுறித்து, விபத்தை முதன் முதலில் பார்த்து தீயை அணைக்க முயன்ற கிருஷ்ணசாமி கூறுகையில், '2021-ல் நடைபெற்ற சம்பவம் இன்னும் கண்முன் நிற்கிறது. ஹெலிகாப்டர் விழுந்தவுடன் ஒரே புகை மூட்டமாக இருந்து திடீரென வெடித்து சிதறியது. இதில் சிலர் வெளியே தூக்கி வீசப்பட்டனர். அவர்களை காப்பாற்ற முயன்ற நிலையில், ஒருவரைக்கூட காப்பாற்ற முடியவில்லை என்ற ஆதங்கம் இன்றும் மனதில் உள்ளது.
எங்கோ இருந்த முப்படை தளபதி, எங்கள் ஊரில் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இவ்விபத்து நடந்தபோது, எங்கள் மக்கள் உதவியதை பார்த்து ராணுவ அதிகாரிகள் எங்களுக்கு உதவுவதாக உறுதியளித்தனர். அதன்படி, ஒரு ஆண்டு முழுவதும் மருத்துவ முகாம்களை நடத்தினர். பள்ளி குழந்தைகளுக்கு தேவையான உதவிகளை வழங்கினர். போர்வைகள், மளிகைப் பொருட்களும் வாங்கி தந்தனர்.