நீலகிரி: குன்னூர் நஞ்சப்பசத்திரம் பகுதியில் நிகழ்ந்த ஹெலிகாப்டர் விபத்தில் முப்படைத் தலைமைத் தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மதுலிக்கா ராவத் உள்பட 14 பேர் உயிரிழந்தனர். நஞ்சப்பசத்திரம் கிராம மக்கள் உதவியுடன் தீயணைப்பு, ராணுவத்தினர் உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டனர்.
விபத்து குறித்து முப்படைகளின் சார்பில் விசாரணை அலுவலராக ஏர் மார்ஷல் மன்வேந்திர சிங் நியமிக்கப்பட்டுள்ளார். அவரது தலைமையிலான குழுவினர் விபத்து நடந்த பகுதியை நேரில் பார்வையிட்டுத் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். விபத்து நடந்த பகுதியை ராணுவம் தங்களது கட்டுப்பாட்டில் கொண்டுவந்துள்ளது.
ராணுவம், விமான படையினர் விபத்து நடந்த பகுதியில் கிடக்கும் சிதைந்த ஹெலிகாப்டர் பாகங்களைச் சேகரித்துவருகின்றனர். சேகரிக்கப்படும் பாகங்களை சூலூர் விமான படைத்தளத்துக்கு கொண்டுசெல்லவுள்ளனர். ஆனால் சாலை வசதி இல்லாததால், சிதைந்த பாகங்களைக் கொண்டுசெல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.