நீலகிரி மாவட்டம் குன்னூர் நகராட்சிக்குச் சொந்தமாக குன்னூர் பேருந்து நிலையம் அருகே கார் பார்க்கிங் ஒன்று உள்ளது. இந்தக் கார் பார்க்கிங் டெண்டர் முறையில் விடப்படுகிறது. இதன் உரிமையாளர் கடந்த இரண்டு ஆண்டுகளாக நகராட்சிக்கு செலுத்த வேண்டிய வாடகையை செலுத்தாமல் இருந்துள்ளார்.
இது தொடர்பாக நகராட்சி நிர்வாகம் பலமுறை எச்சரிக்கைவிடுத்தும் வாடகை பாக்கியை செலுத்தாததால் நகராட்சிக்கு 18 லட்சம் ரூபாய் வரை இழப்பீடு ஏற்பட்டுள்ளது. இதனால், தற்போது புதிதாகப் பொறுப்பேற்றுள்ள ஆணையர் பாலு கார் பார்க்கிங்கை சீல்வைக்க உத்தரவிட்டார். அதன்பேரில், நகராட்சி அலுவலர்கள் அதிரடியாகக் கார் பார்க்கிங்கை இழுத்து மூடி சீல்வைத்தனர்.
நகராட்சிக்குச் செலுத்தவேண்டிய பணத்தை முறையாகச் செலுத்தாததால் குன்னூர் பகுதியில் எந்த ஒரு அடிப்படை வசதிகளும் செய்யமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது எனப் பொதுமக்கள் தெரிவித்துவருகின்றனர். இந்நிலையில், தற்போது சீல்வைக்கப்பட்ட கார் பார்க்கிங்கை நகராட்சி நிர்வாகமே பொறுப்பேற்று திறந்துள்ளது.