நீலகிரி :குன்னூர் பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9 ஆக அதிகரித்து உள்ளது. தென்காசியில் இருந்து 59 பயணிகளுடன் ஊட்டி உள்ளிட்ட பகுதிகளுக்கு சுற்றுலா சென்ற திரும்பிய தனியார் பேருந்து, நேற்று (செப். 30) மாலை 5.15 மணியளவில் குன்னூர் மேட்டுப்பாளையம் சாலையில் 9வது கொண்டை ஊசி வளைவின் அருகே கட்டுப்பாட்டை இழந்த 50 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த கோர விபத்தில் 8 பேர் உயிரிழந்த நிலையில், 4 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி மேலும் ஒருவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த பத்மா ராணி என்பவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
ஏற்கனவே இந்த விபத்தில் பேருந்தில் பயணித்த முப்புடாதி (வயது 67), முருகேசன் (வயது 65), இளங்கோ (வயது 64), தேவிகலா (வயது 42), கௌசல்யா (வயது 29) மற்றும் நிதின் (வயது 15) ஆகிய எட்டு பேர் உயிரிழந்த நிலையில் தற்போது பத்மா ராணி என்பவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை சுகாதாரம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோர் இன்று சந்தித்து ஆறுதல் கூற உள்ளனர். மேலும் விபத்து நடந்த இடத்தை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு செய்ய உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில், பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள X வலைத்தளப் பதிவில், “தமிழ்நாட்டின் நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே பேருந்து விபத்துக்குள்ளானதில் பயணிகள் உயிரிழந்தது வேதனை அளிக்கிறது. என் எண்ணங்கள் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுடன் உள்ளன. காயம் அடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன். உயிரிழந்த ஒவ்வொருவரின் உறவினர்களுக்கும் பிரதமரின் தேசிய நிவாரண நிதியில் இருந்து 2 லட்சம் ரூபாய் மற்றும் காயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.50,000 வழங்கப்படும்” என குறிப்பிடப்பட்டுள்ளது.
முன்னதாக, நேற்று குன்னூர் சுற்றுலாப் பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கலையும், காயம் அடைந்தவர்களுக்கு ஆறுதலையும் தெரிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.2 லட்சம், படுகாயம் அடைந்தவர்களுக்கு ரூ.1 லட்சம் மற்றும் காயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.50,000 அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க :குன்னூர் பேருந்து விபத்து! சம்பவ இடத்திற்கு விரைந்த அமைச்சர்!