நீலகிரி மாவட்டத்தின் முக்கிய பிரதான சாலையாக விளங்கி வருவது குன்னூர் - மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலை. இதில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் வந்து செல்கின்றன. இந்நிலையில், நீலகிரி மாவட்ட மக்களுக்கு அன்றாட பொருட்களான பால் முதல் பெட்ரோல் வரை, இந்த சாலை வழியாகத்தான் லாரிகள் மூலம் கொண்டு செல்லப்படுகின்றன.
மேலும், நீலகிரி மாவட்டத்திற்கு வரும் சுற்றுலாப் பயணிகளும் இச்சாலையையே பெரும் அளவில் பயன்படுத்தி வருகின்றனர். அதே போன்று, சமவெளி பகுதிகளான கோவை, சென்னை போன்ற பெரு நகரங்களுக்கு நீலகிரி மக்கள் இவ்வாழியாகவே செல்கின்றனர். இதனாலே இந்த சாலை எப்போதும் போக்குவரத்து நெருக்கடி மிகுந்ததாக காணப்படுகிறது.
இந்த நிலையில், பல ஆண்டுகளுக்கு முன் இந்த சாலையில் உள்ள 13வது கொண்டை ஊசி வளைவை அடுத்து, மரப்பாலம் தர்கா அமைந்திருந்தது. 1993ஆம் ஆண்டு பெய்த பலத்த மழை காரணமாக, தர்காவில் இருந்த நான்கு பேர் மண் சரிவில் சிக்கி உயிரிழந்தனர். மேலும் அப்பகுதியில் இரண்டு அரசு பேருந்துகள் நிலச்சரிவில் அடித்துச் செல்லப்பட்டது. தற்போது வரை பேருந்தில் பயணித்தவர்கள் குறித்த விவரம் தெரியவில்லை எனக் கூறப்படுகிறது.
அதன்பின், 2009ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஏழாம் தேதி முதல் 13ஆம் தேதி வரை பெய்த பலத்த மழையால், குன்னூர் - மேட்டுப்பாளையம் சாலையில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில், குறும்பாடி பகுதியில் இருந்த தனியார் ஓட்டலின் நீச்சல் குளம் அடித்துச் செல்லப்பட்டது. 13வது கொண்டை ஊசி வளைவின் கீழ் டீக் கடை நடத்தி வந்தவர், மண்ணில் புதைந்து உயிரிழந்தார்.
மேலும் சாலைகள் துண்டிப்பு ஏற்பட்டு அத்தியாவசிய பொருட்கள் வந்து செல்வதற்கும் சிரமம் ஏற்பட்டது. 2009 ஆம் ஆண்டு பேருந்து விபத்துக்குப் பிறகு, 13 ஆண்டுகள் கழித்து மீண்டும் 13வது கொண்டை ஊசி வளைவைக் கடந்து செல்லும் பேருந்துகள், கடந்த ஒரு மாதமாக விபத்துக்கு உள்ளாகி வருவதாக கூறப்படுகிறது.
இதில், அண்மையில் தென்காசி கனையம் பகுதியில் இருந்து சுற்றுலா வந்த பேருந்து விபத்துக்கு உள்ளாகி 9 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்தப் பேருந்து விபத்து அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது. அதைத் தொடர்ந்து, இப்பகுதியில் அமானுஷ்ய சக்திகள் உள்ளதாக பலரும் கூறி வரும் நிலையில், மீண்டும் மலைப்பாதையில் பேருந்து விபத்து ஏற்பட்டு 22 பேர் மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுச் சென்றனர்.