நீலகிரி மாவட்டத்தில் ஆகஸ்ட் 2ஆம் தேதி முதல் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. குறிப்பாக பருவமழையின் தாக்கம் உதகை, கூடலூர், பந்தலூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அதிகளவு காணப்பட்டது. இந்நிலையில், இன்று (ஆகஸ்ட் 8) காலை முதல் பிற்பகல் வரை மழையின் தாக்கம் சற்று ஓய்ந்திருந்த நிலையில் கூடலூர், பந்தலூர் பகுதிகளில் மீண்டும் மழை கொட்டித் தீர்த்தது.
நீலகிரியில் 6ஆவது நாளாக கனமழை - நெடுஞ்சாலையில் மண் சரிவு
நீலகிரி: நீலகிரியில் தொடர்ந்து பெய்து வரும் கன மழையால் உதகை - கூடலூர் தேசிய நெடுஞ்சாலையில் மண் சரிவு ஏற்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், உதகையிலிருந்து கூடலூர் வழியாக கர்நாடகா மற்றும் கேரளா செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் நடுவட்டம் பகுதியில் ஐந்திற்கும் மேற்பட்ட இடங்களில் மண் சரிவு ஏற்பட்டுள்ளதால் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. சாலையில் விழுந்த பாறைகள் மற்றும் மண் குவியல்களை சரி செய்யும் பணியில் ஜேசிபி இயந்திர உதவியுடன் நெடுஞ்சாலைத் துறை ஊழியர்கள் மற்றும் தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனிடையே இன்றும், நாளையும் (ஆகஸ்ட் 8) நீலகிரியில் மிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதனால் இப்பகுதியில் மேலும் மண் சரிவு, நிலச்சரிவு ஏற்படும் அபாயம் இருப்பதால் மாவட்டம் முழுவதும் தீயணைப்பு துறையினர், நெடுஞ்சாலை துறையினர், தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் தயார் நிலையில் உள்ளனர்.