நீலகிரி:தமிழ்நாட்டின் நீலகிரி மாவட்டத்தில் உள்ள முதுமலை புலிகள் காப்பகத்தின் ஒரு பகுதியான தெப்பக்காடு யானைகள் முகாமிற்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இன்று (ஆக.05) மாலை வருகை தந்தார். மைசூரில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் சிங்காரா (நீலகிரி மாவட்டம்) ஹெலிபேட் மைதானத்தை வந்தடைந்தார். குடியரசுத் தலைவர் அங்கிருந்து சாலை மார்க்கமாக மாலை 4 மணியளவில் தெப்பக்காடு யானைகள் முகாமை சென்றடைந்தார்.
தெப்பக்காடு யானைகள் முகாமில் பராமரிக்கப்பட்டு வரும் யானைகளை பார்வையிட்ட குடியரசுத் தலைவர், யானைகளுக்கு கரும்புகளை வழங்கினார். அதன் பிறகு, ஆஸ்கார் விருது பெற்ற ஆவணப்படமான 'தி எலிஃபண்ட் விஸ்பரர்ஸ்' படத்தின் நாயகர்களான பொம்மன் மற்றும் பெல்லி ஆகியோரை சந்தித்து உரையாடினார்.
இதைத் தொடர்ந்து, தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு யானைகள் முகாம்களில் பணிபுரியும் யானை பாதுகாவலர்கள் உள்ளிட்டோருடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் யானைப் பராமரிப்பாளர்கள் தமது பணிகள் குறித்து குடியரசுத் தலைவரிடம் விளக்கமளித்தனர். அவர்களுக்கு குடியரசுத் தலைவர் வாழ்த்துகளை தெரிவித்தார். பின்னர், அவர்களுடன் நின்று குழுவாக புகைப்படம் எடுத்துக்கொண்டார்.
அப்போது பேசிய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, "ஆசியாவின் மிகப் பழமையான யானைகள் முகாம்களில் ஒன்றான முதுமலைக்கு வந்து இன்று உங்களையெல்லாம் சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். கடந்த மாதம் ஆஸ்கார் விருது பெற்ற 'The Elephant Whisperes' என்ற ஆவணப்படத்தைப் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. ஆதரவற்ற குட்டி யானைகளை தங்கள் குழந்தைகளைப் போல் பராமரித்து வரும் பொம்மன், பெல்லி தம்பதியரை சந்தித்து வாழ்த்து தெரிவித்தேன்.
இந்த ஆவணப்படத்தின் மூலம் தமிழ்நாடு வனத்துறையின் செயல்பாடுகள் மற்றும் யானை பராமரிப்பு மேலாண்மைக்கு உலக அங்கீகாரம் பெற்றது. அனைவருக்கும் பெருமை சேர்க்கும் விஷயம் இது. நான் உங்கள் அனைவரையும் சந்தித்து வனவிலங்கு பாதுகாப்புக்கு நீங்கள் ஆற்றி வரும் பெரும் பங்களிப்பைப் பார்க்க வேண்டும் என்று நினைத்தேன்.