நீலகிரி மாவட்டத்தில் கரோனா தொற்று பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதுவரை 16 ஆயிரம் நபர்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தினந்தோறும் 450க்கும் மேற்பட்டோருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது. தளர்வுகளற்ற முழு ஊரடங்கு காரணமாக சுற்றுலாத் தொழிலாளர்கள், வாகன ஓட்டுநர்கள், நடைபாதை வியாபாரிகள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் வருவாய் இன்றி தவித்து வருகின்றனர்.
இவ்வாறு பாதிக்கப்பட்டோருக்கு தன்னார்வலர்கள் பலர் ஆங்காங்கே நிவாரணப் பொருள்களை வழங்கி வருகின்றனர். இந்நிலையில் நீலகிரி மாவட்ட சேவாபாரத அமைப்பு சார்பாக ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான நிவாரணப் பொருள்களை வழங்கும் பணி இன்று (மே.26) முதல் தொடங்கப்பட்டுள்ளது. உதகையில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற நிவாரணப் பொருள்கள் வழங்கும் நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் இன்னசன்ட் திவ்யா கலந்து கொண்டார்.