நீலகிரி மாவட்டம் உதகையில் நேற்றிரவு (அக்.08) சுமார் ஒரு மணி நேரம் கனமழை பெய்தது. ஒரு மணி நேரத்தில் 6 செ.மீ மழை பெய்த நிலையில் கிரீன் பீல்டு பகுதியிலுள்ள ஏராளமான வீடுகளுக்குள் மழை நீர் புகுந்தது. இதனால், வீடுகளிலிருந்த மின்சாதன பொருள்கள், உடைமைகள் சேதமடைந்தன.
இந்நிலையில் இன்று (அக்.09) காலை மழை நீர் புகுந்து பாதிக்கபட்ட கிரீன் பீல்டு பகுதியை மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா பார்வையிட்டார். அப்போது நகராட்சி அலுவலர்களிடம் மழை நீர் புகுவதை தடுக்க நடவடிக்கைகள் எடுப்பது குறித்து கேட்டறிந்தார்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “உதகையில் உள்ள கோடப்பமந்து கால்வாயை 5 கோடி ரூபாயில் தூர்வாறும் பணிகள் உடனடியாக தொடங்கப்படும். அதன் மூலம் கிரீன் பீல்டு பகுதிக்குள் மழை நீர் புகாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கபடும்” என்றார்.
மேலும், மலை ரயில் சேவை குறித்த கேள்விக்கு அவர் கூறுகையில், “உதகை-குன்னூர் இடையே நாளை முதல் மலை ரயிலை இயக்க நீலகிரி மாவட்ட நிர்வாகம் அனுமதியளித்துள்ளது. ஆனால் மலை ரயில் சேவையை தொடங்குவது குறித்து ரயில்வே நிர்வாகம்தான் முடிவு செய்ய வேண்டும்.
சுற்றுலாப் பயணிகள் நீலகிரிக்கு வர இபாஸ் தேவை. ஆனால், உள்ளூர் மக்களுக்கு இபாஸ் தேவையில்லை. எனவே, உள்ளூர் மக்கள் மலை ரயிலில் பயணம் செய்ய ஏதுவாக அனுமதி அளிக்கபட்டுள்ளது.
சேதமடைந்த வீடுகளை பார்வையிட்ட ஆட்சியர் திவ்யா இதனிடையே மலை ரயில் இயக்க மாவட்ட நிர்வாகம் அனுமதியளித்திருந்தாலும் தென்னக ரயில்வே நிர்வாகம் மலை ரயில் இயக்குவது குறித்து எந்த வித அதிகாரபூர்வமான தேதியையும் அறிவிக்கவில்லை. இதனால், உதகை-குன்னூர் இடையிலான மலை ரயில் சேவை நாளை தொடங்க வாய்ப்பில்லை. அக்.15-ஆம் தேதிக்கு மேல் மலை ரயில் இயக்க வாய்ப்புள்ளது” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: குன்னூர்-ஊட்டி இடையே மலை ரயில் சோதனை ஓட்டம்!