நீலகிரி:கிறிஸ்துமஸ், ஆங்கிலப் புத்தாண்டு நெருங்குவதையொட்டி விதவிதமான கேக்குகள் தயாரிக்கும் பணியில் இனிப்பகங்கள் ஈடுபட்டுவருகின்றன.
கிறிஸ்து பிறந்த நாளாகக் கருதப்படும் டிசம்பர் 25ஆம் தேதி உலகம் முழுவதும் கிறிஸ்தவர்கள், கிறிஸ்துமஸ் பண்டிகையைக் கோலாகலமாகக் கொண்டாடிவருகின்றனர். அந்நாளில் கிறிஸ்தவ மக்கள் தேவாலயங்களுக்குச் சென்று வழிபட்டுவருவதுடன், கேக் வெட்டி ஒருவருக்கொருவர் வாழ்த்துகள் பரிமாறிக் கொள்வது வழக்கம். தொடர்ந்து ஆங்கிலப் புத்தாண்டும் சிறப்பாகக் கொண்டாடப்படும்.
2019ஆம் ஆண்டில் கரோனா இல்லாத சூழலில் நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதிகளில் கிறிஸ்துமஸ், ஆங்கிலப் புத்தாண்டு கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. தற்போது கரோனா பாதிப்பு ஓரளவு குறைந்து தளர்வு அறிவிக்கப்பட்டுள்ளதால், கிறிஸ்துமஸ் கேக்குகள் தயாரிக்கும் பணி துரிதகதியில் நடந்துவருகின்றன.
குழந்தைகளைக் கவரும் வண்ணமயமான கேக்குகள் கேரட், பீட்ரூட் உள்ளிட்ட மலை காய்கறிகளைக் கொண்டும் கேக் தயாரிக்கப்பட்டுவருகிறது. மேலும், மயில், மிக்கி மவுஸ், ரோஜா, மலர்கள், குழந்தைகளைக் கவரும்விதமாக பொம்மை கேக், பிளாக் பாரஸ்ட் கேக்குகள் மக்களைக் கவரும்விதமாக தயாரிக்கப்பட்டுவருகிறது. தற்போதே முன்பதிவு தொடங்கியுள்ளதால் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்திற்கு நீலகிரி தயாராகிவருகிறது.