மலைகளின் அரசியான உதகையில், செப்டம்பர் இரண்டாவது வாரம் முதல் நவம்பர் மாதம் இறுதிவரை இரண்டாவது சீசன் ஆகும். இந்த சீசனில் மட்டும் சுமார் 10லட்சம் சுற்றுலாப் பயணிகள் வந்து செல்வார்கள்.
தாவரவியல் பூங்காவில் இரண்டாவது சீசனுக்கு பராமரிப்புப் பணிகள் தீவிரம். இந்நிலையில், இந்த ஆண்டிற்கான சீசன் ஓரிரு நாட்களில் தொடங்க உள்ளதால் சுற்றுலாப் பயணிகள் கண்டு ரசிப்பதற்காக, தாவரவியல் பூங்காவை அழகுபடுத்தும் பணிகள் தொடங்கபட்டுள்ளன. குறிப்பாக இரண்டாவது சீசனை முன்னிட்டு நடத்தப்படும் மலர் கண்காட்சிகான பணிகள் நடைபெற்றுவருகின்றன.
இந்நிலையில், முதற்கட்டமாக 10ஆயிரம் மலர் தொட்டிகளில் நடவு செய்யப்பட்டிருந்த பிக்கொனியா, மேரிகோல்டு, டெய்லியா, டெய்சி, காலண்டுள்ளா, ஏஸ்டர் உள்ளிட்ட 70 வகையான மலர் தொட்டிகளை பராமரிக்கும் பணிகள் மேற்கொள்ளபட்டுவருகின்றன.
இத்துடன், பூங்காவின் மற்ற பகுதிகளில் நடவு செய்யப்பட்டுள்ள 2.5 லட்சம் மலர் செடிகளையும், புல்வெளிகளையும் பராமரிக்கும் பணியில் பூங்கா ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். இதனால் இந்த ஆண்டு இரண்டாம் சீசன் சுற்றுலாப் பயணிகளை வெகுவாக கவரும் என எதிர்பார்க்கபடுகிறது.