நீலகிரி மாவட்டம் 65% வனப்பகுதியை கொண்ட மாவட்டமாகும். இங்கு வன விலங்குகளான காட்டெருமைகள், புலிகள், சிறுத்தைகள், கரடிகள் என பல்வேறு வனவிலங்குகள் அதிகளவில் உள்ளன. குறிப்பாக குன்னூர் அடர்ந்த வனப்பகுதிக்கு அருகே அமைந்துள்ளதால் வனவிலங்குகள் ஊருக்குள் புகுந்து வருவது வாடிக்கையாக உள்ளது. இதனால் அடிக்கடி பொருள்சேதங்களும், உயிர்சேதங்களும் ஏற்படுகின்றன.
இந்நிலையில், குன்னூர் பகுதியில் சமீப காலமாக காட்டெருமைகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டு வருகின்றன. குடியிருப்பு பகுதிகளில் காட்டெருமைகள் நடமாட்டத்தால் பொது மக்கள் அச்சமடைந்து உள்ளனர். காட்டெருமைகள் தாக்கி உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், குன்னூர் வெல்லிங்டன் கன்டோன்மென்ட் பகுதியைச் சேர்ந்த சந்திரன் (வயது 60) என்பவரை திடீரென காட்டெருமை பலமாக தாக்கியதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து அக்கம்பக்கத்தினர் குன்னூர் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
இந்த தகவலின் அடிப்படையில், சம்பவ இடத்திற்கு குன்னூர் காவல்துறையினர் விரைந்து வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குன்னூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், சம்பவம் குறித்து குன்னூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், "குடியிருப்பு பகுதிகளில் சுற்றித் திரியும் ஒற்றைக் காட்டெருமையை அடர்ந்த வனப்பகுதியில் விரட்ட வேண்டும். வனவிலங்குகள் தாக்கி மனிதர்கள் பரிதாபமாக உயிரிழப்பது குன்னூர் பகுதியில் தொடர்கதையாகி வருவதால், வனவிலங்குகள் குடியிருப்பு பகுதியில் வராமல் தடுக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்" என்றனர்.
மேலும், காட்டெருமை தாக்கியதில் முதியவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. காட்டெருமை தாக்கியது குறித்து குன்னூர் வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன் நஞ்சப்பசத்திரம் பகுதியை சேர்ந்த பழனிவேல் (வயது 70) என்பவர் காட்டெருமை மோதி உயிரிழந்தார். குன்னூர் பகுதியில் அடிக்கடி காட்டெருமைகள் மோதி பொது மக்கள் உயிரிழந்து வரும் சம்பவம் அதிகரித்து அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க:சீன மாஸ்டர்ஸ் பேட்மிண்டன்: சாத்விக் - சிராக் ஜோடி அதிர்ச்சி தோல்வி.. நடப்பு சீசனில் முதல் தோல்வி!