நீலகிரி: குன்னூர் வெலிங்டனில் முப்படை ராணுவ பயிற்சி கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் கடந்த ஆண்டு டிசம்பர் 8 ஆம் தேதி நடக்க இருந்த ராணுவ அதிகாரிகளுடனான கலந்துரையாடலில் பங்கேற்பதற்காக முப்படைகளின் தலைமை தளபதியாக இருந்த பிபின் ராவத் டெல்லியில் இருந்து விமானம் மூலம் கோவை சூலூர் விமானப்படை தளத்திற்கு வந்தார்.
சூலூர் விமானப்படை தளத்தில் இருந்து குன்னூர் வெலிங்டன் ராணுவ பயிற்சி மையத்திற்கு எம்.ஐ. ரக ஹெலிகாப்டரில் குன்னூரை நோக்கி பயணித்து கொண்டிருந்தார். பிபின் ராவத்துடன் அவரது மனைவி மதுலிகா ராவத் மற்றும் ராணுவ உயர் அதிகாரிகள் என மொத்தம் 14 பேர் அந்த விமானத்தில் பயணித்தனர்.
குன்னூருக்கு மிக அருகில் தரையிறங்குவதற்கு 10 நிமிடம் இருக்கும் நிலையில், நஞ்சப்பசத்திரம் என்னும் இடத்தில், வானில் பறந்து கொண்டிருந்த ஹெலிகாப்டர் திடீரென்று விபத்துக்குள்ளாகி வெடித்து சிதறியது. இந்த வெடிச்சத்தம் நடுக்காட்டில் ஏற்பட்டாலும் அந்த பகுதி மக்களை குலை நடுங்க செய்தது. இதில் ஹெலிகாப்டர் முழுவதும் சுக்கு நூறாகிவிட்டது.
இந்த விபத்தில் பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகா ராவத், பிரிகேடியர் எல்.எஸ்.லிட்டர், லெப்டினன்ட் கர்னல் ஹர்ஜிந்தர் சிங், நாயக் குருசேவக் சிங், நாயக் ஜிதேந்திர குமார், லான்ஸ் நாயக் சாய் தேஜா, லான்ஸ் நாயக் விவேக் குமார், ஹவில்தார் சத்பால் ராய், விங் கமாண்டர் பிரித்வி சிங் சவுகான், ஸ்குட்ரான் லீடர் குல்தீப் சிங், ஜூனியர் வாரன்ட் ஆபீஸர் ராணா பிரதாப் தாஸ், ஜூனியர் வாரன்ட் ஆபீஸர் பிரதீப் உள்பட 13 பேர் சம்பவ இடத்திலேயே இறந்தனர்.