நீலகிரி மாவட்டத்தில் பெய்த தொடர் கனமழையால் பவானிசாகர் அணையின் நீர்வரத்து அதிகபட்சமாக 22 ஆயிரம் கனஅடியாக இருந்து வந்தது. கடந்த அக்டோபர் 14ஆம் தேதி 96அடியாக இருந்த அணையின் நீர்மட்டம், தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்ததால் 102 அடியை தற்போது எட்டியுள்ளது.
பொதுப்பணித்துறை விதிகளின்படி, அணையின் நீர்மட்டம் 102 அடியை எட்டும்போது நீரை தேக்கிவைக்க இயலாது, அணையின் பாதுகாப்பு கருதி அணைக்கு வரும் உபரி நீரை, அப்படியே பவானி ஆற்றில் திறந்துவிட வேண்டும். அதன்படி, தற்போது அணையின் நீர்மட்டம் 102 அடியை எட்டியுள்ளதால், அணையின் 9 மதகுகள் வழியாக தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது.
இதையடுத்து உள்ளாட்சி மற்றும் வருவாய்த்துறை சார்பில் பவானிசாகர் கரையோரத்தின் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் அனைவரும் பாதுகாப்பான இடத்திற்கு செல்லுமாறு தண்டோரா மூலம் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.