உதகை: கோடை காலத்தின் தொடக்கமாக தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் வெயில் சுட்டெரித்து வருகிறது. அதே நேரம் ஒருசில மாவட்டங்களில் அவ்வப்போது மழை பெய்கிறது. கோடை காலத்தில் நீலகிரி மாவட்டம் உதகையில் இதமான சூழல் நிலவும் என்பதால் அங்கு சுற்றுலாப்பயணிகள் படையெடுப்பது வழக்கம்.
பள்ளி, கல்லூரிகளில் ஆண்டு இறுதித்தேர்வு முடிந்து கோடை விடுமுறை விடப்படும் போது, உதகைக்கு செல்வோரின் எண்ணிக்கை கணிசமாக அதிகரிக்கும். அங்குள்ள பூங்காக்களுக்குச் செல்லும் மக்கள் இயற்கை அழகை கண்டு ரசிப்பார்கள். இந்நிலையில் நாளை (ஏப்ரல் 1) முதல், மே 31ம் தேதி வரை, உதகையில் உள்ள பூங்காக்களில் சினிமா படப்பிடிப்புக்கு தடை விதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
உதகை தாவரவியல் பூங்காவில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி மற்றும் பிறமொழி படங்களின் சினிமா படப்பிடிப்பு அவ்வப்போது நடத்தப்படுவது வழக்கம். ஆனால், தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, தேயிலை பூங்கா, மரவியல் பூங்கா, சிம்ஸ் பூங்காக்களுக்கு இந்தாண்டு லட்சக்கணக்கான மக்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அவர்களுக்கு இடையூறு ஏற்படும் என்பதால், 2 மாதங்கள் சினிமா படப்பிடிப்புகளுக்கு அனுமதியில்லை என, தோட்டக்கலைத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காக வாகன நிறுத்துமிடம், குடிநீர், சுகாதாரமான கழிப்பிட வசதி உள்ளிட்ட ஏற்பாடுகளை செய்ய மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. தங்கும் விடுதிகளில் அதிக அளவு கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட நிர்வாகம் எச்சரித்துள்ளது.
இதையும் படிங்க: நள்ளிரவு முதல் உயரும் டோல்கேட் கட்டணம்.. எவ்வளவு உயர வாய்ப்பு..