டேனிஸ் (எ) கிருஷ்ணா 2016ஆம் ஆண்டு நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ள நெடுகல்கம்பை ஆதிவாசி பழங்குடியின கிராமத்திற்குச் சென்று அரசுக்கு எதிராக மக்களிடம் பேசியது, சுவரொட்டி ஒட்டியது தொடர்பாக கொலக்கம்பை காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு கொலக்கம்பை காவல் துறையினரால் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
இதற்கிடையே மாவோயிஸ்ட் ஆதரவு நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகக் கூறி இவர் மீது கேரள மாநில காவல் துறையிலும் வழக்குப் பதியப்பட்டிருந்ததால் கேரள மாநிலத்தில் திருச்சூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
நீலகிரியில் இவர் மீதான வழக்கு உதகையிலுள்ள மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்றுவந்தது. இந்த வழக்கில் கடந்த 20ஆம் தேதி இவர் முன்னிலையாக வேண்டியிருந்த நிலையில், தனக்கு உடல்நிலை சரியில்லாததால் நேரில் முன்னிலையாக முடியாது என அவகாசம் கேட்டிருந்தார்.
இதற்கிடையே, டேனிஷ் கைதுசெய்யப்பட்டு 180 நாள்களுக்குள் காவல் துறை குற்றப்பத்திரிகை தாக்கல்செய்திருக்க வேண்டுமென்ற நிலையில், 180 நாள்களுக்கும் மேலாகிவிட்டதால் இவருக்கு உடனடியாக பிணை வழங்க வேண்டும் என மக்கள் சட்ட மையத்தின் வழக்குரைஞர் விஜயன் உதகை நீதிமன்றத்தில் மனு தாக்கல்செய்திருந்தார்.
மாவோயிஸ்ட் டேனிஷுக்கு பிணை வழங்கிய நீதிமன்றம் இந்த மனுவானது மாவட்ட நீதிபதி வடமலை முன் வெள்ளிக்கிழமையன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு வழக்குரைஞர் பால நந்தகுமார் வாதிடுகையில், டேனிஷ் மீது பயங்கரவாதத் தடுப்பு சட்டத்தின்கீழ் வழக்குப் பதியப்பட்டிருப்பதால் இவருக்கு பிணை வழங்கக்கூடாது என எதிர்ப்புத் தெரிவித்தார். ஆனால் டேனிஷ் தரப்பில் முன்னிலையான வழக்குரைஞர்கள் விஜயன், ராஜா ஆகியோர் சட்டப்பூர்வமான பிணை வழங்குவதைத் தடுக்கக் கூடாது என வாதிட்டனர்.
இதையடுத்து மாவட்ட நீதிபதி வடமலை வழங்கிய தீர்ப்பில் டேனிஷுக்கு 15 நாள்கள் பிணை வழங்கியும், அவரது ரத்த சொந்தமுள்ள ஒருவர் ரூ. 25,00-க்கான பிணையம் வழங்க வேண்டுமெனவும், மறு உத்தரவு வரும்வரை அவர் கொலக்கம்பை காவல் நிலையத்தில் தினந்தோறும் கையெழுத்திட வேண்டுமெனவும் உத்தரவிட்டார்.
இதையும் படிங்க:'ரஜினி அனைத்தும் அறிந்தவர்; அவர் ஒரு லெஜெண்ட்'