நீலகிரி: கரோனா தொற்றின் இரண்டாவது அலை வேகமாக பரவிய அதே வேகத்தில் 18 வயதிற்கு மேற்பட்ட பழங்குடியின மக்கள் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தி இந்தியாவுக்கே முன்மாதிரியானது நீலகிரி மாவட்டம்.
கடந்த ஜூன் மாதம் இறுதிக்குள் 18 வயதுக்கு மேற்பட்ட 21 ஆயிரத்து 700 பழங்குடியினருக்கு தடுப்பூசி போட்டு முடிக்க முடிவு செய்யபட்டது. அதன்படி 30 நாள்களில் அனைவருக்கும் கரோனா தடுப்பூசி போட்டு முடிக்கப்பட்டது.
மேலும் 10 ஆயிரம் தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டது. இதனால் தமிழ்நாட்டில் அனைத்து பழங்குடியினருக்கும் தடுப்பூசி போடப்பட்ட முதல் மாவட்டம் என்ற பெயரை நீலகிரி மாவட்டம் பெற்றது.
அதற்காக இரவும், பகலுமாக பணியாற்றிய மருத்துவர்கள், சுகாதாரத் துறை ஊழியர்கள், முன்கள பணியாளர்கள் என 371 பேருக்கு பாராட்டு விழா இன்று உதகையில் நடைபெற்றது.