நீலகிரி மாவட்டம் உதகை நகராட்சிக்குட்பட்ட எல்க்ஹில் குமரன் நகர் பகுதியில் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்துவருகின்றனர். அப்பகுதியில் கடந்த ஆறு மாதத்திற்கு முன் புதிதாக சாலை அமைக்கப்பட்டது.
அந்த சாலை ஓரத்தில் சிமெண்ட் கான்கிரீட் பெயரளவிற்கு மட்டுமே போடப்பட்டதாகவும் இடையில் இன்டர்லாக் கற்கள் பதிக்கப்பட்டுள்ளதால் மழைக்காலத்தில் மட்டுமல்லாமல் வெயில் காலத்திலும் இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் விழுந்து விபத்து ஏற்படுகிறது என்றும் அப்பகுதியினர் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
எல்க்ஹில் குமரன் நகர் பகுதி மேலும், நாள்தோறும் பள்ளி குழந்தைகளை ஏற்றிச் செல்லும் 50க்கும் மேற்பட்ட ஆட்டோக்கள் இச்சாலையை பயன்படுத்துவதால், விபத்துகளை தவிர்ப்பதற்காக குண்டும் குழியுமாக காணப்பட்ட சாலையில் பெரிய அளவிலான கற்களைப் போட்டு பொதுமக்கள் அதை தற்காலிகமாக சீரமைத்து பயன்படுத்தி வருகின்றனர்.
எனவே மாவட்ட நிர்வாகமானது இதை கருத்தில்கொண்டு சேதமடைந்த சாலைகளை சீர் செய்து தர வேண்டும் எனவும் சம்பந்தப்பட்ட துறைக்கு ஆணையிட்டு சாலையை சரி செய்து தர வேண்டும் எனவும் இப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் படிக்க:நீலகிரியில் தீபாவளிக்கு பட்டாசு வெடிக்கத் தடை - வனத்துறை!