அருவங்காடு வெடிமருந்து தொழிற்சாலை தொழிலாளர்கள் உண்ணாவிரதம்!
குன்னூர்: அருவங்காடு வெடிமருந்து தொழிற்சாலையை பாதுகாக்க நாடு தழுவிய உண்ணாவிரத போராட்டம் அருவங்காடு தொழிற்சாலை வளாகத்தில் நடைபெற்றது.
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே அருவங்காடு வெடிமருந்து தொழிற்சாலை 1903ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு 115 ஆண்டுகளுக்கு மேலாக நாட்டுக்காகச் சேவையாற்றிவருகிறது.
1962, 1967ஆம் ஆண்டுகளில் இந்தியா-சீனா போர்கள் 1965, 1971ஆம் ஆண்டுகளில் இந்தியா-பாகிஸ்தான் போர்களிலும், குறிப்பாக 1999ஆம் ஆண்டு கார்கில் போரின் வெற்றிக்கு இத்தொழிற்சாலையும், தொழிலாளர்களும் சேவை புரிந்துள்ளனர்.
தற்போது கோவிட் நோய்த்தொற்று ஊரடங்கு காலகட்டத்தில் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக, இந்த தொழிலாளர்கள் லட்சம் லிட்டர் கிருமிநாசினி உற்பத்தி செய்து உள் மாவட்டங்களுக்கும், வெளி மாவட்டங்களுக்கும் அனுப்பிவைத்துள்ளனர்.
நீலகிரி மாவட்டத்தின் பொருளாதாரத்தை நிர்ணயிக்கும் இந்தத் தொழிற்சாலை கார்ப்பரேஷனாக மாற்றப்பட்டால் பணி நிரந்தரம் இருக்காது.
சமூகரீதியாகப் பின்தங்கிய மற்றும் ஒதுக்கப்பட்ட சமுதாயங்களைச் சார்ந்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு இருக்காது என்பதற்காக கார்ப்பரேஷனாக மாறுவதை கண்டித்தும் அருவங்காடு வெடிமருந்து தொழிற்சாலையை பாதுகாக்கவும் நாடு தழுவிய உண்ணாவிரத போராட்டம் அருவங்காடு தொழிற்சாலை வளாகத்தில் நடைபெற்றது.
இதில் சி எஃப் எல் யு தலைவர் ரவி, செயலாளர் ஹரிஹரன், ஐஎன்டியூசி தலைவர் ஜோசி, செயலாளர் திலீப் குமார் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட தொழிற்சாலை தொழிலாளர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.