நீலகிரி:குன்னூர் அருகே உள்ள நஞ்சப்பசத்திரம் கிராமத்தில் கடந்த 8ஆம் தேதி ராணுவத்திற்குச் சொந்தமான ஹெலிகாப்டர் விபத்திற்குள்ளானது.
இதில் பயணம் செய்த முப்படைத் தலைமைத் தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகா ராவத் உள்பட 13 பேர் உயிரிழந்தனர். விபத்து ஏற்பட்டபோது ராணுவம், காவல் துறையினருக்கு நஞ்சப்பசத்திரம் கிராம மக்கள் போர்வை உள்ளிட்டவைகளை வழங்கி உதவி புரிந்தனர்.
இதையடுத்து கிராம மக்களுக்கு ராணுவம் சார்பில் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி இன்று (டிச.13) அப்பகுதியில் நடைபெற்றது. இதில் தக் ஷின் பாரத் ஏரியாவின் ராணுவப் படைத் தலைவர் லெப்டினன்ட் ஜெனரல் ஏ. அருண் கலந்துகொண்டு கிராம மக்களிடம் கலந்துரையாடி நன்றி தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் கிராம மக்களுக்கு போர்வை, சோலார் எமர்ஜென்சி விளக்குகள், உணவுப் பொருட்கள் போன்றவை வழங்கப்பட்டன.
கிராம மக்களுக்கு ராணுவம் சார்பில் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி நிகழ்ச்சியில் பேசிய லெப்டினன்ட் ஜெனரல் ஏ. அருண், தக் ஷின் பாரத் ஏரியா சார்பில் நஞ்சப்பசத்திரம் கிராமம் தத்தெடுக்கப்படும். கிராம மக்கள் ஒன்று கூடும் வகையில், சமுதாயக் கூடம் ஒன்று அமைத்துத் தரப்படும்' என்று தெரிவித்தார்.
மேலும் ஹெலிகாப்டர் விபத்தை நேரில் பார்த்து உடனடியாகத் தகவல் தெரிவித்த கிருஷ்ணசாமி, குமார் ஆகியோருக்கு லெப்டினன்ட் ஜெனரல் ஏ. அருண் தலா ரூ. 5 ஆயிரம் பரிசாக வழங்கினார்.
நிகழ்ச்சியில் குன்னூர் ஆர்.டி.ஓ தீபன் விஸ்வேஷ்வரி, வண்டிசோலை பஞ்சாயத்து தலைவி மஞ்சுளா சதீஷ், யுனியன் கவுன்சிலர் கருணாநிதி, வார்டு உறுப்பினர் ரமேஷ் , கன்டோன்மென்ட் முன்னாள் தலைவர் வினோத்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்
இதையும் படிங்க: 10 ஆண்டுகளில் குடிசைகள் இல்லாத மாநிலமாக தமிழ்நாடு மாறும் - ஸ்டாலின் உறுதி