கூடலூர் அருகேயுள்ள மசினகுடி பகுதியில் 40 வயது ஆண் காட்டு யானைக்கு கடந்த 2 மாதங்களுக்கு முன்பு முதுகில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவதிப்பட்டு வந்த அந்த யானைக்கு கடந்த மாதம் 28 ஆம் தேதி, கும்கி யானைகளின் உதவியுடன் மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது.
எனினும் அந்த யானை குடியிருப்பு பகுதிக்குள் வருவதையும், சாலை ஓரத்தில் நிற்பதையும் வழக்கமாக கொண்டிருந்தது. இந்த நிலையில் நேற்று அந்த யானையை சில மர்ம நபர்கள் தாக்கியதாகக் கூறபடுகிறது. அதில் அந்த யானையின் இடது காது கிழிந்ததுடன் காதின் சில பகுதிகளும் துண்டாகி கிழே விழுந்துள்ளன. இதனால் யானைக்கு கடும் ரத்த போக்கு ஏற்பட்டுள்ளது.
ஏற்கனவே முதுகில் ஏற்பட்ட காயத்தால் சோர்வுடன் காணப்பட்ட யானை, தற்போது காது கிழிந்து தொடர்ந்து ரத்தம் வடிவதால் மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளது. எனவே, அதற்கு உடனடியாக மருத்துவ சிகிச்சை அளிக்க முடிவு செய்த புலிகள் காப்பக இணை இயக்குனர் ஸ்ரீகாந்த் தலைமையிலான குழுவினர், அதற்கான முயற்சியில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், அந்த யானைக்கு இன்று மயக்க ஊசி செலுத்தப்பட்டது. இதையடுத்து அதனை முதுமலை யானைகள் முகாமில் கொண்டு சென்று சிகிச்சை அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் முகாமிலுள்ள கிராலில் (மரக்கூண்டில்) வைத்து முதுகு மற்றும் காதில் ஏற்பட்ட காயத்திற்கு மருத்துவக் குழுவினர் தொடர் சிகிச்சை அளிக்க முடிவு செய்துள்ளனர். இதற்கான அனுமதியை வனத்துறை வழங்கியுள்ளது.
இதையும் படிங்க: விலகியது வட கிழக்கு பருவ மழை