டெல்லி:ஆம்புரெக்ஸ் திட்டத்தை திறமையாக செயல்படுத்தி வரும் ராதிகா சாஸ்திரிக்கு பாராட்டு தெரிவித்து ஒன்றிய இணை அமைச்சர் எல். முருகன் ட்வீட் செய்துள்ளார்.
மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை இணை அமைச்சர் எல்.முருகன், ராதிகா சாஸ்திரியை தொலைப்பேசி வாயிலாகத் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்தார்.
பின்னர், அவர் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், 'இந்தத் தன்னலமற்ற சேவை நீலகிரியில் வசிக்கும் மக்களை ஊக்குவிப்பதுடன் அந்தப் பகுதியில் சுகாதார வசதிகளையும் மேம்படுத்தும்' என்று குறிப்பிட்டுள்ளார்.
உலகை அச்சுறுத்தி வரும் பெருந்தொற்றுக்கு எதிராக மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் சூழலில், தமிழ்நாட்டில் முதன்முறையாக அறிமுகப்படுத்தப்பட்ட ஆட்டோ அவசரகால ஊர்தி சேவை அந்தப் பகுதி மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. பல்வேறு அமைப்புகளின் பங்களிப்போடு அறிமுகப்படுத்தப்பட்ட இந்த ஆட்டோ அவசரகால ஊர்தியில் ஆக்சிஜன் உள்ளிட்ட அனைத்து மருத்துவ வசதிகளும் இடம் பெற்றுள்ளன.
பிரதமர் பாராட்டியது மகிழ்ச்சி - ராதிகா சாஸ்திரி
மலைப் பிரதேசங்களில் அரசு அவசர சிகிச்சை ஊர்திகள் செல்ல முடியாத பகுதிகளுக்கும் சென்று சேவை செய்யும் வகையில் இந்த ஆட்டோ இயக்கப்படுகிறது. குறுகலான பாதைகளில் பயணித்து குக்கிராமங்களில் வசிக்கும் நோயாளிகளையும் மருத்துவமனைக்கு உடனடியாக அழைத்து வந்து சிகிச்சை அளிப்பதற்கு இந்தப் புதிய அவசர சிகிச்சை ஊர்தி பேருதவியாக இருக்கும்.
சமுதாயத்திற்கு தம்மால் ஏதாவது ஒரு வகையில் சேவை செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் இந்தத் திட்டத்தை அறிமுகப்படுத்தியதாக நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த ராதிகா சாஸ்திரி கூறினார். தற்போது குன்னூர், கோத்தகிரி, உதகமண்டலம் ஆகிய இடங்களில் 6 ஆட்டோ அவசரகால ஊர்திகள் இயக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.