நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட மசனகுடி மற்றும் கூடலூரை அடுத்துள்ள தேவன் எஸ்டேட், தேவர்ச்சோலை பகுதிகளில் கடந்த ஆண்டு டி23 என்னும் புலி 4 மனிதர்களையும், 30க்கும் மேற்பட்ட கால்நடைகளையும் அடித்துக் கொன்றது. இந்த புலியைப் பிடிக்க பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றது. இதனையடுத்து வனத்துறை சார்பாக புலியை உயிரோடு பிடிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
குறிப்பாகக் கடந்த ஆண்டு செப்டம்பர் 24-ஆம் தேதி சந்திரன் என்பவரை தேவர்சோலை பகுதியிலிருந்த T23 புலி அடித்துக் கொன்றது. இதனையடுத்து அப்பகுதி மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். 7 மணி நேர போராட்டத்துக்குப் பிறகு T23-புலியை பிடிக்க நடவடிக்கை எடுப்பதாக வனத்துறை உறுதி அளித்ததன் பேரில் போராட்டம் கைவிடப்பட்டது.
இதனையடுத்து கடந்த செப்டம்பர் மாதம் 24-ம் தேதி முதல் தலைமை வனப்பாதுகாவலர், 5-க்கும் மேற்பட்ட வனக் கால்நடை மருத்துவர்கள், நூற்றுக்கும் மேற்பட்ட வன பணியாளர்கள், மோப்ப நாய்கள், கும்கி யானைகள் என அனைவரும் T23 புலியை உயிருடன் பிடிக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டனர். இறுதியாக அக்டோபர் மாதம் 15-ம் தேதி மசினகுடி பகுதியில் T23 புலி மயக்க ஊசி செலுத்தி உயிருடன் பிடிக்கப்பட்டது.