நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதி, வனத்தை ஒட்டியுள்ள பகுதியாகும். இங்கு சிறுத்தை, காட்டெருமை, கரடி போன்ற வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. அவ்வப்போது உணவு தேடி வனவிலங்குகள் குடியிருப்புப் பகுதியில் வலம் வருவது வாடிக்கையாக உள்ளது. இதேபோன்று குன்னூர் எடப்பள்ளி பகுதியில் உணவு தேடி வந்த காட்டெருமை ஒன்று காலில் பிளாஸ்டிக் பைப் சிக்கியதால் நடக்கமுடியாமல் இரு தினங்களாக குடியிருப்பு பகுதியிலேயே சிக்கித் தவிக்கிறது.
இதன் காரணமாக அப்பகுதியில் உள்ள மக்கள் காட்டெருமைக்கு பக்கெட் மூலம் குடிநீர் வழங்கி வருகின்றனர். காட்டெருமையின் சோக நிலையை கண்டு பரிதவிக்கும் அப்பகுதி மக்கள், உடனடியாக வனத்துறையினர் காட்டெருமையின் காலில் சிக்கியுள்ள பிளாஸ்டிக் பைப்பை மயக்க ஊசி செலுத்தி அகற்ற வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளனர்.