நீலகிரி: நீலகிரி மாவட்டம் 65% வனப்பகுதி கொண்ட மாவட்டமாகும். இங்கு வன விலங்குகளான காட்டெருமைகள், புலிகள், சிறுத்தைகள், கரடிகள் எனப் பல்வேறு வனவிலங்குகள் அதிகளவில் உள்ளன. இதனால் வனவிலங்குகள் ஊருக்குள் புகுந்து வருவது வாடிக்கையாக உள்ளது. மேலும், அடிக்கடி பொருள்சேதங்களும், உயிர்சேதங்களும் ஏற்படுகின்றன.
மேலும், நீலகிரி மாவட்டத்தில் அரசு மற்றும் தனியார் தேயிலைத் தோட்டங்களும் அதிக அளவில் உள்ளன. இங்குள்ள கூடலூர், பாண்டியாறு, நெல்லியாளம், சேரம்பாடி, சேரங்கோடு, கொளப்பள்ளி, கோத்தகிரி, நடுவட்டம், குன்னூர், பந்தலூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள அரசு மற்றும் தனியார் தேயிலைத் தோட்டங்களில் (டேன்டீ) நிரந்தர மற்றும் தற்காலிக தொழிலாளர்களாக ஆயிரக்கணக்கானோர் பணியாற்றி வருகின்றனர்.
இந்நிலையில் பந்தலூர் அருகே மேங்கோரேஞ் தனியார் தேயிலைத் தோட்டத்தில் ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த சிவசங்கர் கர்வா என்பவர் பணிபுரிந்து வருகிறார். இவருக்கு திருமணமாகி மூன்று வயதில் நான்சி என்ற ஒரு பெண் குழந்தை உள்ளது.
இந்நிலையில், வீட்டில் கனவன் - மனைவி இருவரும் தனியார் தேயிலைத் தோட்டத்திற்கு வேலைக்குச் செல்வதால் குழந்தைகள் காப்பகத்தில் தனது குழந்தையை விட்டுச் செல்வர். இந்நிலையில், நேற்று (ஜன.6) மாலை குழந்தைகள் காப்பகத்தில் இருந்து இவரது மனைவி 3 வயது சிறுமியான நான்சியை அழைத்து வரும் போது, காட்டுக்குள் இருந்து வெளியே வந்த சிறுத்தை ஆக்ரோஷமாக குழந்தையைத் தாக்கி தேயிலைத் தோட்டத்திற்குள் தூக்கிச் சென்றது.