இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்த நாளான ஈஸ்டர் எனும் உயிர்ப்பு பெருவிழா நேற்று உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டது. கடந்த வெள்ளியன்று புனித வெள்ளியாக அனுசரித்த கிறிஸ்தவர்கள் இயேசுவை சிலுவையில் அறையப்பட்டதை நினைவுகூரும் வகையில் அவரின் பாடுகளை அறிக்கையிடும் சிலுவை பாதை நிகழ்வை நினைவு கூர்வார்கள்.
அதனைத் தொடர்ந்து மூன்றாம் நாளான நேற்று இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்த தினத்தை கிறிஸ்தவர்கள் ஈஸ்டர் எனும் உயிர்ப்பு பெருவிழாவாக வெகு விமரிசையாக கொண்டாடினார்கள்.
ஆனால் இந்த ஆண்டு கரோனா வைரஸ் தொற்று அச்சம் மற்றும் அரசு அறிவித்த 144 தடை உத்தரவை மதித்து மக்கள் யாரையும் அனுமதிக்காமல் பங்கு தந்தையர்கள் தனியாக திருப்பலி நிறைவேற்றினர். குறிப்பாக நள்ளிரவு 12 மணிக்கு உதகையில் உள்ள தூய இருதய ஆண்டவர் பேராலயத்தில் இயேசு கிறிஸ்து மரித்து மூன்றாம் நாள் உயிர்தெழுந்ததை முன்னிட்டு பங்கு தந்தையர் ஸ்தனிஸ் தலைமையில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது.