குன்னூரில் வீட்டுக்குள் பதுங்கியிருந்த சிறுத்தை நீலகிரி:குன்னூரில் வீட்டிற்குள் புகுந்து 6 பேரை தாக்கி, வீட்டில் பதுங்கி இருந்த சிறுத்தை 26 மணி நேரத்திற்குப் பிறகு தானாகவே வீட்டிலிருந்து வெளியேறி வனப்பகுதிக்குள் சென்றதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
குன்னூர் அருகே புருக்லேண்ட்ஸ் பகுதியில் நாயை துரத்தி வந்த சிறுத்தை, விமலா என்பவரின் குடியிருப்பு பகுதிக்குள் நேற்று காலை 4 மணியளவில் நுழைந்தது. சிறுத்தை வீட்டிற்குள் இருப்பதைப் பார்த்த வீட்டின் உரிமையாளர், தீயணைப்புத் துறை மற்றும் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறை மற்றும் தீயணைப்புத் துறையினர், சிறுத்தையைத் தேடும் பணியில் ஈடுபட்டனர்.
இதில், எதிர்பாராத விதமாக உள்ளிருந்த சிறுத்தை, அங்கிருந்தவர்களைத் தாக்கிஉள்ளது. இதில் செய்தியாளர் உட்பட தீயணைப்புத் துறையினர் ஆறு பேர் காயம் அடைந்தனர். இதனையடுத்து, சிறுத்தை தாக்கி காயமடைந்தவர்களுக்கு குன்னூர் மற்றும் உதகை அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க:'மதுர குலுங்க குலுங்க..' மதுரை தீபாவளி கொண்டாட்டத்தின் ட்ரோன் வீடியோ காட்சிகள்
இந்நிலையில், வீட்டிற்குள் புகுந்த சிறுத்தை பட்டாசு சத்தத்திற்கு பயந்து வீட்டுக்குள்ளேயே தஞ்சம் அடைந்தது. நேற்று காலை வீட்டிற்குள் புகுந்த சிறுத்தை, வீட்டை விட்டு வெளியேறாமல் வீட்டுக்குள்ளேயே பதுங்கி இருந்தது.
இதனையடுத்து, மாவட்ட வன அலுவலர் கவுதம் அறிவுரைப்படி, சிறுத்தையை பிடிக்கும் பணிகளில் தீயணைப்புத் துறையினர் மற்றும் வனத்துறையினர், 3 சிசிடிவி கேமரா மற்றும் ஒரு தானியங்கி கேமரா பொருத்தி சிறுத்தை நடமாட்டத்தை தீவிரமாக தொடர்ந்து கண்காணித்து வந்தனர். மேலும் அந்த சிறுத்தைக்கு எந்த தொந்தரவும் செய்யாமல், அதனை வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை மேற்கொண்டனர்.
இந்நிலையில், இன்று காலை கேமராக்களை ஆய்வு செய்ததில் நேற்று இரவு 10 மணியளவில் சிறுத்தை தானாகவே வீட்டில் இருந்து வெளியேறி வனப்பகுதிக்குள் சென்றிருப்பது தெரிய வந்துள்ளது. குடியிருப்பிற்குள் புகுந்து 6 பேரை தாக்கி, 26 மணி நேரத்திற்குப் பிறகு சிறுத்தை வனப்பகுதிக்குள் சென்றதால் அப்பகுதி மக்கள் நிம்மதியடைந்துள்ளனர்.
இதையும் படிங்க:கர்நாடகாவில் காதலிக்க மறுத்த பெண்ணின் டீப் ஃபேக் புகைப்படங்களை வெளியிட்ட இளைஞர் கைது!