நீலகிரி மாவட்டம் மசினகுடி அருகே உள்ள பொக்காபுரம், மாவனல்லா, வாழைத்தோட்டம் ஆகிய பகுதிகளில் யானைகள் வழித்தடத்தை மறித்து தனியார் தங்கும் விடுதிகள் கட்டப்பட்டுள்ளதாக 2008ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.
இதனை விசாரித்த உயர் நீதிமன்றம் ஆக்கிரமிப்புகளை அகற்றுமாறு உத்தரவிட்டது. இதனை எதிர்த்து தனியார் விடுதி உரிமையாளர்கள் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.
அதில் பொக்காபுரம், சிங்காரா, வாழைத்தோட்டம் ஆகிய பகுதிகளில் முறையாக அனுமதி பெறாமல் இயங்கிவந்த 37 தங்கும் விடுதிகளுக்குச் சீல்வைக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி 37 தனியார் தங்கும் விடுதிகளுக்குச் சீல்வைக்கப்பட்டுள்ளது.
அதற்கு தனியார் தங்கும் விடுதி உரிமையாளர்கள் தொடர்ந்து எதிர்ப்புத் தெரிவித்து வருவதாலும், யானைகள் வழித்தடம் எனக் குறிப்பிடப்பட்டுள்ள இடங்களில் ஏராளமான விவசாய நிலங்கள், குடியிருப்புகள் உள்ளதாலும் ஓய்வுபெற்ற சென்னை உயர் நீதிமன்ற நீதபதி வெங்கட்ராமன் தலைமையில் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டது.