நீலகிரி கூடலூரை அடுத்துள்ள முதுமலை புலிகள் காப்பகத்தில் 27-க்கும் மேற்பட்ட வளர்ப்பு யானைகள் பராமரிக்கப்பட்டுவருகின்றன. தெப்பக்காடு, பாம்பேக்ஸ், ஈட்டிமரம் உள்ளிட்ட மூன்று முகாம்களில் இந்த யானைகள் பராமரிக்கப்பட்டுவந்தன.
கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்னர் தெப்பக்காடு, அபயராண்யம் ஆகிய இரண்டு இடங்களில் முகாம்கள் செயல்பட்டன. இதில், தெப்பக்காடு பகுதியில் உள்ள முகாமில் மட்டுமே சுற்றுலாப் பயணிகள் உள்ளிட்ட பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுவந்தது. மற்ற இடங்களிலுள்ள முகாம்களுக்குப் பார்வையாளர்களுக்கு அனுமதி கிடையாது.
பிரதான சாலையோரத்தில் அபயராண்யம் யானைகள் முகாம் இருப்பதால் அவ்வழியாக வாகனங்களில் வரும் சுற்றுலாப் பயணிகள் வாகனங்களை நிறுத்தி எந்தவித அனுமதியும் இன்றி முகாம்களுக்கு வருகின்றனர். இதனால் பல்வேறு பிரச்னைகள் ஏற்பட்டதால் இங்குள்ள யானைகள் பாம்பேக்ஸ், ஈட்டி மரம் ஆகிய இரண்டு இடங்களில் உள்ள முகாம்களில் பராமரிக்கப்பட்டன.
இந்நிலையில் கடந்த ஏப்ரல் மாதத்தில் பெய்த கனமழையில் பாம்பேக்ஸ் முகாமில் மரங்கள் விழுந்து முகாம் சேதமடைந்தது. ஈட்டி மரம் முகாம் தற்காலிகம் என்பதால் அதுவும் மூடப்பட்டது. இதனையடுத்து, அனைத்து யானைகளும் தெப்பக்காடு முகாமிற்கு கொண்டுவரப்பட்டன.