நீலகிரி: குன்னூரில் அடுத்த மாதம் 3ஆம் தேதி சென்னையில் நடைபெறவுள்ள 7வது ஆசிய சாம்பியன் டிராபி ஹாக்கி தொடரில் வெற்றி பெறும் அணிக்கு வழங்கப்படவுள்ள சாம்பியன் கோப்பையை குன்னூரில் நடந்த நிகழ்ச்சியில் சுற்றுலாத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் மற்றும் நீலகிரி மாவட்ட ஆட்சியர் ஹாக்கி விளையாட்டு வீரர்கள், பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் பார்வைக்கு அறிமுகம் செய்து வைத்தனர்.
இந்த ஆசிய சாம்பியன் டிராபி ஹாக்கி தொடருக்கு லோகோவாக உள்ள யானை உருவத்திற்கு ஆஸ்கர் விருது பெற்ற ’’தி எலிபெண்ட் விஸ்பரர்ஸ்’’ ஆவணப்படத்தின் கதையின் மைந்தனான யானைப் பாகன் பொம்மனின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்நிலையில் இவ்விழாவில் பொம்மன், பெள்ளி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
'தி பாஸிங் த பால்' என பெயரிடப்பட்ட இவ்விழாவில் சிறப்பு விருந்தினர்களாக தமிழ்நாடு சுற்றுலாத் துறை அமைச்சர், நீலகிரி மாவட்ட ஆட்சியர், ஆஸ்கர் விருது பெற்ற பொம்மன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
பின்னர் ''தி எலிபெண்ட் விஸ்பரர்ஸ்'' ஆவணப்படத்தின் கதாநாயகனான பொம்மனுக்கு யானை உருவத்தில் பொம்மன் பெயர் பொறித்த டி சர்ட் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றிய தமிழ்நாடு சுற்றுலாத் துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன், ”மத்தியில் ஆளுகின்ற ஒன்றிய அரசு மனது வைத்து சிறப்பாக ஆட்சி செய்தால் எல்லா விளையாட்டிலும் நம் நாட்டு வீரர்கள் தான் முதலில் இருப்போம். தமிழ்நாடு முதலமைச்சர் பொறுப்பேற்ற நாள் முதல் விளையாட்டுத்துறைக்கு என ஒரு தனித்துவம் கொடுத்து வருகிறார்.