நீலகிரி மாவட்டம் கூடலூர் நகராட்சிக்கு உள்பட்ட எஸ்.எஸ்.நகர் பகுதியில் சுமார் 25 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நிலையில் ஒரு பெண் உயிரிழந்தார். இதனையடுத்து நகராட்சி அலுவலர்கல் மற்றும் சுகாதாரத் துறை அலுவலர்கள் நடத்திய ஆய்வில் அதன் அருகில் உசேன் என்ற ஒரு தனி நபர் பழைய பொருள்களை வாங்கும் கடை வைத்திருந்தது தெரியவந்தது. சுகாதாரமில்லாத நிலையிலிருந்த அந்த கடைக்கு பலமுறை எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
இந்நிலையில் அந்தக் கடையின் பின்புறம் டன் கணக்கில் தடை செய்யப்பட்ட பொருள்கள் பாதுகாப்பின்றி செடிகளில் மறைத்திருப்பதாக தகவல் கிடைத்தது.
இதனையடுத்து நகராட்சியினர் அங்கு சென்று ஆய்வு செய்தபோது டெங்கு கொசு உற்பத்தியாகும் வகையில் 7 டன் பிளாஸ்டிக் கழிவு பொருள்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனையடுத்து அங்கு வந்த சுகாதாரத் துறையினர் மற்றும் நகராட்சியினர், சுமார் 25-க்கும் மேற்பட்ட தொழிலாளர்களை வைத்து அந்த பிளாஸ்டிக் குப்பைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். மேலும் இச்சம்பவமறிந்த அந்த இடத்தின் உரிமையாளர் உசேன் தலைமறைவாகியுள்ளார்.
அந்தப் பகுதியில் அதிகளவில் பிளாஸ்டிக் குப்பைகள் உள்ளதால் அதனை அப்புறப்படுத்த மூன்று நாள்களாகும் எனவும் அதனை முழுவதுமாக அப்புறப்படுத்தி சீல் வைக்கப்படும் மீண்டும் கடை நடத்த அனுமதி கொடுக்க முடியாது என நகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.
டெங்கு பரவ காரணமாக இருந்த தடைசெய்யப்பட்ட 7 டன் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் மேலும் ஒரு லட்சத்துக்கும் மேல் அபராதத் தொகையும் அந்த குப்பைகளை அகற்றும் பணியாளர்கள் உள்பட திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் உள்ள குப்பை கிடங்கிற்கு அதனை கொண்டு செல்ல செலவாகும் பணமும் உரிமையாளரிடமிருந்து வசூலிக்கப்படும் எனவும் மேலும் புதிய தொற்று பரவ காரணமாக இருந்த குற்றத்திற்காக அவர் மீது பல்வேறு வழக்குகள் தொடர நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்துள்ளார்.
இதுபோன்ற பிளாஸ்டிக் பொருள்கள் நீலகிரி மாவட்ட நலனுக்காக கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு மாவட்ட ஆட்சியர் முழுவதும் தடை செய்தது குறிப்பிடத்தக்கது. இருந்தபோதிலும் கடந்த 15 வருடங்களுக்கு மேல் உள்ள இந்த குப்பைகள் டன் கணக்கில் குவியல் குவியலாக இருந்தது சமூக ஆர்வலர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க:
ஒரு லட்சம் மதிப்பிலான பிளாஸ்டிக் கவர்கள் பறிமுதல்