நீலகிரி மாவட்டத்தில், கடந்த 1981ஆம் ஆண்டு இலங்கையிலிருந்து திரும்பிய தமிழர்கள், அங்குள்ள தேயிலை தோட்டங்களில் வேலை செய்து வருகின்றனர். இவர்களுக்கென நிரந்தரக் குடியிருப்புகள் இல்லாமல் குன்னூர், ஊட்டி, கோத்தகிரி, கூடலூர் என, பல்வேறு இடங்களில் வசித்து வந்தனர்.
இந்த நிலையில், கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பு குன்னூர் பகுதியிலுள்ள விஜயநகரப் பேலஸ் என்ற இடத்தில் 60 இலங்கைத் தமிழ் குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். தற்போது வசித்து வரும் நிலத்தின் உரிமையாளர், இலங்கைத் தமிழ் குடும்பங்களை அங்கிருந்து காலி செய்யுமாறு கூறியதை அடுத்து, அங்கிருந்து அனைவருக்கும் மாவட்ட நிர்வாகம் சார்பில் வண்டிச் சோலை பகுதி சுடுகாட்டின் அருகே மாற்று இடம் வழங்கப்பட்டு உள்ளது.
மாவட்ட நிர்வாகம் வழங்கிய பகுதியில் வீடு கட்டி வசிக்க முடியாத நிலையில், தகரங்களை கொண்டு கூடாரம் அமைத்து தற்போது வசித்து வருகின்றனர். குடியிருப்பு அருகே சுடுகாடு உள்ளதால் குழந்தைகள், பெண்களும் அச்சமடைவதோடு, அங்கு புதைக்கப்படும் உடல்களை சில நேரங்களில் நாய் மற்றும் வன விலங்குகள் வெளியே இழுத்து போட்டு விடுகின்றன.
அழுகிய நிலையில் வெளியே கிடக்கும் உடல்களில் இருந்து வரும் துர்நாற்றத்தால் வீடுகளில் தூங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.