தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

காது கிழிந்த காட்டு யானை சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

நீலகிரி: ஊட்டி அருகே மசினகுடி பகுதியில் நேற்று காது கிழிந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் மயக்க ஊசி செலுத்தி முதுமலை வளர்ப்பு யானைகள் முகாமிற்கு கொண்டு செல்லப்பட்ட காட்டு யானை இன்று உயிரிழந்தது.

காது கிழிந்த காட்டு யானை சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு
காது கிழிந்த காட்டு யானை சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

By

Published : Jan 19, 2021, 6:12 PM IST

நீலகிரி மாவட்டம் உதகை அருகே உள்ள மசினகுடி பகுதியில் 40 வயது மதிக்கத்தக்க காட்டு யானை கடந்த 10 ஆண்டுகளாக சுற்றி திரிந்து வந்தது. இந்த யானைக்கு கடந்த 2 மாதங்களுக்கு முன்பு முதுகில் பலத்த காயம் ஏற்பட்டது. அந்த காயத்திற்கு கடந்த மாதம் 28ஆம் தேதி கும்கி யானைகளின் உதவியுடன் மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது. முதுகில் ஏற்பட்ட காயத்திற்கு சிகிச்சையளித்த போதும் அந்த யானை குடியிருப்பு பகுதிக்குள் வருவதுடன் சாலைகளில் நிற்பதையும் வழக்கமாக கொண்டுள்ளது.

இந்நிலையில் அந்த யானையை அடையாளம் தெரியாத சில நபர்கள் தீப்பந்தம் கொண்டு தாக்கியுள்ளனர். அதில் அந்த யானையின் இடது காதில் பலத்த தீக்காயம் ஏற்பட்டது. இதனால் காது கிழிந்ததுடன் சில பகுதிகளும் துண்டாகி கீழே விழுந்தது. முதுகில் ஏற்பட்ட காயத்திற்கு சிகிச்சை அளித்தும் சோர்வுடன் காணப்பட்ட யானைக்கு காது கிழிந்து தொடர்ந்து ரத்தம் கொட்டியதால் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்து வந்தது.

இதனைத்தொடர்ந்து யானையை பிடித்து முதுமலை வளர்ப்பு யானைகள் முகாமிற்கு கொண்டு சென்று சிகிச்சை அளிக்க வனத்துறையினர் முடிவு செய்தனர். அதற்காக இன்று காலை முதுமலையிலிருந்து வசிம், விஜய், கிருஷ்ணா, கிரி ஆகிய 4 கும்கி யானைகள் வரவழைக்கபட்டன. பின்னர் கால்நடை மருத்துவர்கள் இரண்டு முறை அந்த யானைக்கு மயக்க ஊசி செலுத்தினர். உடல் நலிவடைந்திருந்த அந்த யானை மயக்க ஊசி செலுத்திய சில நிமிடங்களில் மயங்கி கீழே விழுந்தது.

மயக்க ஊசி செலுத்தி லாரியில் ஏற்றப்பட்டு நேற்று முதுமலைக்கு கொண்டு செல்லபட்ட யானை

அதிர்ச்சியடைந்த வனத்துறையினர் உடனடியாக கும்கி யானைகளின் உதவியுடன் அந்த யானையை தூக்கி நிற்க செய்துள்ளனர். பின்னர் அந்த யானை லாரியில் ஏற்றப்பட்டு நேற்று முதுமலைக்கு கொண்டு செல்லபட்டது. அங்கு அந்த யானைக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கபட்ட நிலையில் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது.

இதையும் படிங்க:கோவையில் மேலும் ஒரு யானை உயிரிழப்பு... விசாரணை அமைக்க கோரிக்கை

ABOUT THE AUTHOR

...view details