நீலகிரி மாவட்டத்தில் அதிகமான படுகர் இன மக்கள் வாழ்ந்து வருகின்றனர். உருளைகிழங்கு, கேரட், பீட்ரூட் உள்ளிட்ட பல்வேறு மலைக் காய்கறிகளை சாகுபடி செய்து வரும் இவர்கள் ஆண்டிற்கு இரண்டு முறை மலை காய்கறிகளை பயிரிடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
இந்நிலையில் படுகர் இன மக்கள் தங்களது நிலங்களில் விதைகளை போடும்போதும், அறுவடை செய்யும்போதும் திருவிழாவாக கொண்டாடி வருகின்றனர். இந்த ஆண்டிற்கான விதைப்பு திருவிழா, கடந்த மார்ச் மாதம் உதகை அருகே உள்ள அப்புக்கோடு கிராமத்தில் நடைபெற்றது.
பயிரிட்ட மலைகாய்கறிகள தற்போது நன்றாக வளர்ந்து அறுவடைக்கு தயாராக உள்ளது. இதனையடுத்து மேற்கு நாடு சீமையில் உள்ள 33 கிராமங்களை சேர்ந்த படுகர் இன மக்கள் ஒன்று கூடி உதகை அருகே உள்ள அப்பகோடு கிராமத்தில் அறுவடை திருவிழாவை கொண்டாடினர்.
33 கிராம மக்கள் ஒன்று கூடி அறுவடை திருவிழா! விழாவை முன்னிட்டு ஒன்று கூடிய படுகர் இன மக்கள், தங்கள் நிலங்களில் விளைந்துள்ள உருளை கிழங்கை அப்பகோடு ஈதேஸ்வரன் கோயிலுக்கு எடுத்து வந்து தீயில் வேக வைத்து படைத்து வழிப்பட்டனர். பின்னர் மழை வேண்டி சிறப்பு பிரார்த்தனையும் செய்தனர். அதனை தொடர்ந்து கோயில் வளாகத்தில் வட்டமாக நின்று தங்களது பாரம்பரிய நடனத்தை ஆடி மகிழ்ந்தனர்.