நீலகிரி: தமிழ்நாட்டில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மார்ச் 13ஆம் தேதி முதல் ஏப்ரல் 3ஆம் தேதி வரை நடைபெற்றது. கடந்த மார்ச் 27ஆம் தேதி 12ஆம் வகுப்புக்கான கணிதத் தேர்வு நடைபெற்றபோது, நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே உள்ள சாம்ராஜ் அரசு உதவிபெறும் பள்ளியில் அறை எண் 3, 4-ல் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு மேற்பார்வையாளர்கள் உதவியதாக குற்றச்சாட்டு எழுந்தது. குறிப்பாக அதே பள்ளியில் ஆசிரியர்களாக பணியாற்றும் நித்யா மற்றும் நிவேதா ஆகியோரின் பிள்ளைகளுக்கு மேற்பார்வையாளர்கள் விடை எழுத உதவியதாக கூறப்பட்டது.
இந்த சூழலில் கடந்த மே 8ஆம் தேதி 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளிவந்த நிலையில், சாம்ராஜ் மேல்நிலைப் பள்ளியில் குறிப்பிட்ட அறைகளில் தேர்வு எழுதிய 34 மாணவ மாணவியர்களின் கணித தேர்வு முடிவுகள் வெளியாகவில்லை. இதனைத் தொடர்ந்து சாம்ராஜ் மேல்நிலைப் பள்ளிக்கு மே ஒன்பதாம் தேதி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முனியசாமி மற்றும் கோவை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பூபதி ஆகியோர் விசாரணை மேற்கொண்டனர்.
தேர்வு அறையின் கண்காணிப்பு கேமரா பதிவுகளை கைப்பற்றி விசாரணை நடத்தியதில், மாணவர்களுக்கு மேற்பார்வையாளர்கள் உதவியது தெரியவந்தது. இதையடுத்து 34 மாணவர்களின் கணித தேர்வு முடிவுகள் நிறுத்தி வைக்கப்பட்டன.
இதையடுத்து, கடந்த மே. 15ஆம் தேதி, 34 மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்கள் உதகையில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர். இது குறித்து விசாரணை நடந்து வருவதாகவும், அதனால் தற்பொழுது எந்த முடிவையும் எடுக்க முடியாது என்றும் மாவட்ட ஆட்சியர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், சென்னையில் பள்ளி கல்வித்துறையின் சார்பாக 32 மாணவ மாணவியர்களின் கணித தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. அதில் ஒரு மாணவன் தோல்வி அடைந்ததாகவும், 31 மாணவ மாணவியர்கள் வெற்றி பெற்றதாகவும் அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதனைத் தொடர்ந்து மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும், ஒரு மாணவி மற்றும் ஒரு மாணவன் தேர்வு முடிவுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக கடந்த 8ஆம் தேதி, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது - அதில் தமிழ்நாட்டில் 94.03 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றனர். 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய 8,03,385 மாணவர்களில் 7,55,451 பேர் தேர்ச்சி பெற்றனர். இந்த ஆண்டும் மாணவர்களை விட மாணவிகள் அதிகம் தேர்ச்சி பெற்றிருந்தனர். மாணவிகள் கூடுதாக 4.03 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றனர். கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் அதிகரித்து உள்ளது.
இதையும் படிங்க: CBSE Result: சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு!