நீலகிரி மாவட்டம் குன்னூர் பேருந்து நிலையம் அருகே செல்போன் கடைகள் இயங்கிவருகின்றன. நேற்று முன்தினம் (பிப். 1) இரவு கடை ஊழியர்கள் வழக்கம்போல கடையை அடைத்துவிட்டுச் சென்றுள்ளனர்.
நேற்று (பிப். 2) வழக்கம்போல் கடையைத் திறந்து பார்த்தபோது, கடையிலிருந்த செல்போன்கள் திருடுபோயிருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். மேலும் கடையின் பின்புறச் சுவரில் துளையிட்டு செல்போன்களைக் கொள்ளையடித்துச் சென்றது தெரியவந்தது.
தகவலறிந்து வந்த காவல் துறையினர், அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்புப் படக்கருவியைக் கொண்டு விசாரணை நடத்தினர். அதில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் செல்போன்களைக் கொள்ளையடித்த காட்சி பதிவாகியுள்ளது.