கரோனா நோய் தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வரும் நிலையில் இதனைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. நோய் தொற்றை கட்டுப்படுத்த 21 நாள்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கபட்டுள்ளது.
இந்நிலையில் இன்று தமிழ்நாடு முதலமைச்சர் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் காணொலி காட்சி மூலம் கலந்துரையாடினார். கூட்டம் நிறைவடைந்தவுடன் செய்தியாளர்களைச் சந்தித்த மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா, ‘நீலகிரி மாவட்டத்தில் கரோனா நோய் தொற்று யாருக்கும் இல்லை, வெளி நாடுகள் மற்றும் வெளி மாநிலங்களிலிருந்து வந்த 732 நபர்கள் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு தொடர்ந்து கண்காணிக்கபட்டு வருகின்றனர்’ என்றார்.
நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா பேட்டி மேலும் மாவட்டத்திலிருந்து அனுப்பப்பட்ட ஏழு பேருடைய ரத்த மாதிரியில் நோய் தொற்று இல்லை எனவும், வீட்டு கண்காணிப்பில் உள்ளவர்கள் வெளியே நடமாடினால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
உழவர் சந்தை மற்றும் நகராட்சி சந்தைகளில் தொடர்ந்து மக்கள் கூட்டம் அதிகமாகவுள்ளது. எனவே சமூக இடைவெளிக்காக மத்திய பேருந்து நிலையம் மற்றும் காந்தி மைதானத்தில் கூடுதலாக தற்காலிக சந்தைகள் அமைக்கப்படும் எனவும் மக்கள் கூட்டத்தை தவிர்க்க வேண்டுகோள் விடுத்தார்.
சந்தைகளில் நிர்ணயிக்கப்பட்ட விலையை விட பொருள்கள் அதிக விலைக்கு விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்ற அவர், 144 தடையை மீறிய பேர் 91 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்படுள்ளதாகவும், தொடர்ந்து 144 - தடையை மீறுபவர்கள் கைது செய்யபடுவதாகவும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.