நீலகிரி:மலைகளின் அரசி என்றழைக்கப்படும் உதகையில் ஆண்டுதோறும் ஏப்ரல், மே மாதங்களில் கோடை காலத்தில் அதிகளவு சுற்றுலாப் பயணிகள் வருவர். சுற்றுலாப் பயணிகள், பொதுமக்கள் கண்டு ரசிக்க உதகை அரசு தாவரவியல் பூங்காவில் மலர் கண்காட்சி ஏற்பாடு செய்யப்படும்.
கரோனா பரவல் காரணமாக கடந்த இரண்டாண்டுகளாக மலர் கண்காட்சிக்கு பொதுமக்கள் அனுமதிக்கப்படவில்லை. இந்நிலையில் இந்தாண்டு நடைபெற உள்ள 124ஆவது மலர் கண்காட்சிக்காக முதற்கட்டமாக தாவரவியல் பூங்காவில் 275 வகையான 5.5 லட்சம் மலர் நாற்றுகளை நடவுசெய்யும் பணி இன்று (ஜனவரி 4) தொடங்கப்பட்டுள்ளது.
இந்தப் பணியை வனத் துறை அமைச்சர் கா. ராமசந்திரன், உதகை சட்டப்பேரவை உறுப்பினர் கணேஷ், மாவட்ட ஆட்சியர் அம்ரித் ஆகியோர் கலந்துகொண்டு தொடங்கிவைத்து மலர் நாற்றுகளை நட்டனர். அதனைத் தொடர்ந்து பூங்கா ஊழியர்கள் பெட்டோனியா, சால்வியா, மேரிகோல்ட், பேன்சி உள்ளிட்ட 275 வகையான மலர் நாற்றுகளை நட்டனர்.