நீலகிரி மாவட்டம் கூடலூர் நகராட்சிக்கு உட்பட்ட அரசு மேல்நிலைப்பள்ளி அருகில் வசிக்கின்றனர் ராமசாமி, ஜனிதா தம்பதியினர். இவர்களுக்கு நான்காம் வகுப்பு பயிலும் சுஜித்ரா (10) என்ற மகள் இருந்தார். கடந்த சனியன்று பெற்றோர்கள் இல்லாத நேரத்தில் தான் வளர்த்த கிளியின் கூண்டை சுஜித்ரா திறந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், கிளி கூண்டிலிருந்து வேகமாக வெளியேறி தூரமாகப் பறந்துச் சென்றது. இந்த சோகத்தில் இருந்த சுஜித்ரா, தோட்ட வேலைக்காக தனது தந்தை வாங்கி வைத்திருந்த பூச்சி மருந்தை அருந்தியதாகக் கூறப்படுகிறது. வெளியில் சென்று விட்டு வீட்டுக்கு திரும்பிய சுஜித்ராவின் தந்தை, மயங்கிக் கிடந்த தனது மகளை உடனடியாக மேல் சிகிச்சைக்காக கேரள மாநிலத்திற்கு கொண்டு சென்றார்.
இந்நிலையில் சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று (ஆக25) மருத்துவமனையில் சுஜித்ரா உயிரிழந்தார். காவல் துறையினர் மாணவி விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.