தஞ்சாவூர்:பாப்பாநாடு அருகில் கருப்பூர் வீரனார் கீழத்தெருவைச் சேர்ந்தவர் சதீஷ்குமார். இவர் வெளிநாட்டில் ஓட்டுநராகப் பணிபுரிந்து வருகிறார்.
இந்நிலையில் திருமணத்திற்காகக் கடந்த ஆண்டு, தனது சொந்த ஊருக்குத் திரும்பிய சதீஷ்குமாருக்கு, அண்மையில் திருமணம் நடந்துள்ளது.
இந்நிலையில் மீண்டும் வெளிநாடு செல்வதற்காக ஏஜென்ட் ஒருவரைச் சந்திப்பதற்காக, ஒரத்தநாடு அருகே உள்ள தொண்டராம்பட்டு கிராமத்திற்குத் தனது காரில் சென்றுள்ளார். அவருடன் அவரது உறவினரும் இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அப்போது ஏஜென்ட், கடைத்தெருவில் உள்ள டீக்கடையில் நிற்குமாறும், தான் அங்கு வருவதாகவும் கூறியுள்ளார்.
இதனையடுத்து தனது உறவினருடன் தொண்டரம்பட்டு டீக்கடையில் நின்று பேசிக் கொண்டிருந்துள்ளார்.
அப்போது சதீஷ்குமாரின் கார் சாலையின் குறுக்கே இருப்பதால், அதனை ஓரமாக நிறுத்துவதற்காகக் காரை எடுத்தபோது, அவரது உறவினரின் இருசக்கர வாகனம் மீது மோதியது.
இதில் இருசக்கர வாகனம் கீழே விழுந்துள்ளது. இதனைப் பார்த்த அங்கு இருந்த சில இளைஞர்கள் ஏன் இரு சக்கர வாகனம் மீது காரை மோதினாய் எனக் கேட்டு உள்ளனர். அதற்கு சதீஷ்குமார், 'இது தனது அண்ணனின் இருசக்கர வாகனம் தான். அதனால் நாங்கள் பேசிக் கொள்கிறோம்' எனக் கூறியுள்ளார்.
சாலையில் கையைக் கட்டி வைத்து அடித்து கொடுமை
அப்போது போதையிலிருந்த இளைஞர்கள், நீ எந்த ஊர், எந்த தெரு எனக் கேட்டதாகக் கூறப்படுகிறது.
அப்போது தனது ஊரையும், தெருவையும் சதீஷ்குமார் கூறியுள்ளார். அப்போது 'நீ பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த இளைஞனா' எனக் கேட்டு அவரை சரமாரியாக அந்த கும்பல் தாக்கியுள்ளனர்.
மேலும், 'தங்களை எதிர்த்துப் பேசுகிறாயா, எங்கள் ஊருக்கு வரக்கூடாது' என அவரை நிர்வாணமாக்கி, சாலையில் கையைப் பின்னால் கட்டி வைத்து அடித்துள்ளனர்.
இதனைப் பார்த்த அவரது உறவினர் இதனைத் தட்டி கேட்டபோது அவரையும் தாக்கி உள்ளனர். இதில் அவரது செவித் திறன் தற்போது குறைந்துள்ளதாக கூறப்படுகிறது.
அடித்த இளைஞர்களின் காலில் விழுந்த சதீஷ்குமாரின் தந்தை
இதனையடுத்து, தகவலறிந்து வந்த சதீஷ்குமாரின் தந்தை தனபால், அடித்த இளைஞர்களின் காலில் விழுந்து தனது மகனை விட்டு விடுமாறு கெஞ்சியுள்ளார்.