தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே கோவிந்தபுரத்தைச் சேர்ந்த சத்யராஜ் கூலி தொழில் செய்துவருகிறார். இவரது மனைவி உமா(32). இவருக்கு திருமணமாகி ஆறு வருடங்கள் ஆகின்றன. ஏற்கனவே இவர்களுக்கு பெண் குழந்தை உள்ள நிலையில் இரண்டாவது குழந்தைக்காக நரசிங்கன்பேட்டை ஆரம்ப சுகாதார நிலையத்தில் உமா சிகிச்சை பெற்றுவந்தார்.
நேற்று கடுமையான பிரசவ வலி காரணமாக ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்ற உமாவை கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு அங்குள்ள செவிலியர்கள் அனுப்பி வைத்தனர். பிரசவத்தில் உமாவிற்கு பெண் குழந்தை ஒன்று பிறந்தது. இதனைத் தொடர்ந்து உமா ரத்தப்போக்கால் அவதிப்பட்டதாக கூறப்படுகிறது.
மருத்துவர்கள் உமாவிற்கு தீவிர சிகிச்சை அளித்தபோதும் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதை அறிந்த கிராம மக்கள், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முன்னாள் மாவட்ட செயலாளர் விவேகானந்தன் தலைமையில் கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு முன் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.